• Mon. Sep 9th, 2024

காவல்துறை சீனியாரிட்டியில் குளறுபடி.. நடவடிக்கை எடுக்கப்படுமா..?

காவல்துறையில் உரிய சீனியாரிட்டி இல்லாமலேயே முறைகேடு செய்து ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற சில காவலர்கள் முயற்சி செய்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குற்றங்களை தடுக்க வேண்டிய காவல்துறையே இப்படி நடந்துக்கொள்வது வருத்ததிற்க்குரியது.

பொதுவாக காவல்துறையில் சேர கடுமையான பல கட்ட தேர்வுகளில் தகுதிபெற வேண்டும். இந்த நிலையில் தமிழக காவல்துறையில் 1990-1991ம் ஆண்டில் சிறப்பு உத்தரவின் பேரில் நேரடியாக 400 பெண்கள் முதல்நிலை காவலர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து 5 ஆண்டுகளில் தலைமை காவலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.அதேபோல் சிறப்பு உதவி ஆய்வாளர் அதாவது எஸ்.எஸ்.ஐ. ஆக பணிபுரிய 25 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அதிலும் இவர்களுக்கு சிறப்பு சலுகையாக 18 ஆண்டுகளிலேயே சிறப்பு உதவி ஆய்வாளர் பதவி வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதன் பின் 2016ஆம் ஆண்டு இவர்கள் உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்றனர். பதவி உயர்வு என்பது நல்ல விஷயம் என்றாலும் மற்றொரு தரப்பினர் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

2010-2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடியாக உதவி ஆய்வாளர்களாக பணிக்கு சேர்ந்து சுமார் 800க்கும் அதிகமானோர் ஆய்வாளர் பதவி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் 1991 ஆம் ஆண்டின் சிறப்பு பேட்ச்சை சேர்ந்த சிலர் பதவி உயர்வு பெற்ற வருடத்தை 2016ஆம் ஆண்டிற்கு பதிலாக 2011ஆம் ஆண்டாக ரெக்கார்டில் மாற்றியுள்ளனர். இதனால் உரிய சீனியாரிட்டி இல்லாமலே 10 ஆண்டுகள் உதவி ஆய்வாளர்களாக பணியாற்றி வந்ததாக கூறி முறைகேடாக ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற தகுதியுடையவர்கள் என பொய்யாக கணக்கு காட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த முறைகேட்டிற்கு காவல்துறையிலுள்ள சில உயர் அதிகாரிகளும் உடந்தையாக இருந்ததாக சொல்லப்படுகிறது.

2010ஆம் ஆண்டு எஸ்.ஐ. ஆக பதவி உயர்வு பெற்றவர்கள் 10 ஆண்டுகள் அனுபவமின்றி எப்படி இன்ஸ்பெக்டராக முடியும் என கேள்வி எழுப்பியுள்ள 2011 ஆம் ஆண்டு பேட்சை சேர்ந்தவர்கள், ஆய்வாளராக பதவி உயர்வு பெற தகுதி இருந்தும் இன்னும் 7,8 வருடங்கள் காத்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளாக தெரிவித்தனர். 1991 ஆம் ஆண்டு சிறப்பு பேட்சை சிலர் செய்த முறைகேட்டால் தாங்கள் காத்திருக்கும் நிலை இருக்கிறது என்று கூறும் அவர்கள், இந்த முறைகேடு குறித்து உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு பல முறை புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.

தற்போது 2022-2023 ஆம் ஆண்டுக்கான பதவி உயர்வு பட்டியல் தயார் செய்து வரும் நிலையில், ஆய்வாளர்களாக தகுதியுடையவர்கள் பட்டியலில் முறைகேடு செய்தவர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து இந்த முறைகேட்டால் பாதிக்கப்பட்ட உதவி ஆய்வாளர்கள் சுமார் 900 பேர் தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவையும் நிர்வாக கூடுதல் காவல் தலைமை இயக்குனர் சங்கரையும் தனித்தனியாகவும், மொத்தமாகவும் சந்தித்து மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தனர். இந்த முறைகேட்டிற்கு உரிய நடவடிக்கை எடுப்பாரா டிஜிபி… பொறுத்திருந்து பார்ப்போம்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *