புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கைக்குழந்தையுடன் வந்த பெண் தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவரான போலீஸ் தற்போது வேறொரு பெண்ணிடம் தொடர்பில் இருந்து கொண்டு உள்ளே கொடுத்து வருவதாக கொடுத்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மாவட்ட ஆட்சியரிடம் அந்த இளம் பெண் கொடுத்த புகாரில் எனது பெயர் வர்ணியா. எம் பில் படித்து முடித்து இருக்கிறேன். எனது சொந்த ஊர் கொத்தமங்கலம் கிராமம். கல்லூரியில் படிக்கும் போது புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளம் அருகே உள்ள சூசையப்பர் பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகள் அன்பு ராசு என்பவர் நான் படித்த புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் படித்து வந்தார். நாங்கள் இருவரும் காதலித்து வந்தோம். அவர் படித்துக் கொண்டிருந்தபோதே காவல்துறையில் 2013 ஆம் ஆண்டு வேலை கிடைத்ததால் வேலையில் சேர்ந்து விட்டார்.
இருவரும் தொடர்ந்து காதலித்து கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டோம். இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் எனது பெற்றோர் எனது திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் நாங்கள் அங்கு செல்வதும் கிடையாது. சூசையப்பர் பட்டினத்தில் தான் வசித்து வந்தோம். எனது கணவர் அன்பு ராசு தற்போது புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். அவரது பணி நிமித்தமாக புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியில் வாடகைக்கு ஒரு வீடு எடுத்து இருவரும் தங்கி வந்தோம்.
இந்த நிலையில் என் கணவரது ஊரைச் சேர்ந்த அபிராமி என்ற பெண்ணுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டு அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது. இது குறித்து தகவல் அறிந்து காவல் நிலையத்தில் புகார் செய்தேன். அழைத்து விசாரித்த போது என்னுடன் வருவதாக காவல் நிலையத்தில் எழுதிக் கொடுத்து விட்டு சென்றவர்தான் ஆனால் என்னுடன் வராமல் அந்தப் பெண்ணுடன் தங்கி விட்டார். இவ்வாறு அவர் செய்வதற்கு அவரது குடும்பத்தினரும் அபிராமியின் குடும்பத்தினரும் காரணமாகவும் ஆதரவாகவும் இருந்து வருகிறார்கள். எனவே அவர்கள் அனைவரும் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகளிர் காவல் நிலையத்திலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் கொடுத்திருக்கிறேன். அவர் காவல்துறையில் பணி புரிவதால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க மறுத்து வருகின்றனர்.
எனவே எனது எதிர்காலம் கருதி எனது கணவர் எனக்கு ஜீவனாம்சம் தர வேண்டும் என்பதோடு அவர்கள் செய்த குற்றத்திற்கு அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த புகார் மனுவில் தெரிவித்து இருக்கிறார். கைக்குழந்தையுடன் இவ்வாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இளம்பெண் வந்து புகார் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.




