• Fri. Sep 29th, 2023

ராஜபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூழு கூட்டம்..!

ByKalamegam Viswanathan

Jun 13, 2023

ராஜபாளையம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் விரிவுபட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது – இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியின் போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

தமிழ்நாட்டில் உள்ள ஒரு கோடி விவசாய தொழிலாளர்களுக்கு தனி துறை ஏற்படுத்த வேண்டும், கலைஞர் ஆட்சியில் அமைத்ததை போல முதல்வர் ஸ்டாலின் அவர்களும் விவசாய தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும், மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு சட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினுடைய மாநில மாநாடு ஜூலை 28 முதல் 30ஆம் தேதி வரை ராஜபாளையத்தில் நடைபெற உள்ளது.
அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இருப்பதாக கூறும் நிலையில் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை, தொகுதி பங்கீடு இன்னும் நிறைவடையவில்லை.
இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி தன்னிச்சையாக தென் சென்னை பாராளுமன்ற தொகுதியின் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்துவது என்ன கூட்டணி தர்மம் என்று தெரியவில்லை. தொகுதி பங்கீடு குறித்து பேசி முடிக்காத நிலையில் தாங்கள் போட்டியிட கூடிய தொகுதிகளை தேர்வு செய்து உடனடியாக வாக்குச்சாவடி கமிட்டிகளை அமைக்க கட்சித் தொண்டர்களுக்கு கட்டளையிட்டு இருக்கிறார். இதுகுறித்து அதிமுக உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
மேலும் அமித்ஷா கூட்டத்தில் பேசும்போது பெருந்தலைவர் காமராஜ் மூப்பனார் ஆகியோர் பிரதமராக வர இருந்த வாய்ப்பை திமுக தடுத்து நிறுத்தி விட்டதாக கூறி இருக்கிறார். ஆனால் பெருந்தலைவர் காமராஜர் பிரதமர் ஆவதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. நேருவின் மறைவுக்குப் பிறகு லால் பகதூர் சாஸ்திரியையும், அதன் பின் இந்திரா காந்தியையும் பிரதமராக வருவதற்கு பெருந்தலைவர் காமராஜர் தான் முழு பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதேபோன்று மூப்பனார் அவர்களும் பிரதமர் ஆவதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. மாற்று அணியை உருவாக்குவதற்காகவே மூப்பனார் கவனம் செலுத்தினார். பிரதமராக அவருக்கு வாய்ப்பு இருந்தும் அவர் ஆர்வம் காட்டவில்லை. அவருக்கு இருந்த வாய்ப்பை திமுகவும் தடுக்கவில்லை. கலைஞர் கருணாநிதி அவர்களை குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட வலியுறுத்தியபோதும் அவர் அதை மறுத்துவிட்டார்.
உண்மை இவ்வாறு இருக்கும் நிலையில் அமித்ஷா தவறான தகவல்களை பொய்யான தகவல்களை தமிழ்நாட்டில் கட்டவிழ்த்து விட்டு சென்றிருக்கிறார். வருங்காலத்தில் தமிழர் பிரதமராக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். ஆனால் அந்த வாய்ப்பு வரும் தேர்தலில் இல்லை. அந்த வாய்ப்பு மோடிக்கு சென்று விட்டது. பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களின் நாக்கில் அமித்ஷா தேனை தடவி விட்டு சென்றிருக்கிறார்.
தமிழ்நாட்டிற்கு கடந்த 9 ஆண்டு காலத்தில் காங்கிரஸ் ஆட்சியை காட்டிலும் பாஜக ஆட்சியில் ஏராளமான நிதி வழங்கப்பட்டுள்ளதாக கூறிச் சென்றிருக்கிறார்.
தமிழ்நாட்டில் இருந்து வசூல் செய்யப்படுகிற ஜிஎஸ்டி வரி எவ்வளவு என்பதே தமிழக மக்களின் கேள்வியாக இருக்கிறது. ஜிஎஸ்டி வழியாக பிடித்தம் செய்யப்பட்ட மொத்த தொகை எவ்வளவு அதில் எத்தனை சதவிகிதத்தை நீங்கள் மீண்டும் திருப்பி அளித்து இருக்கிறீர்கள்.
ஒன்றிய அரசின் திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்துவதற்கு உரிய தொகை எவ்வளவு இதுவரை எவ்வளவு அளித்திருக்கிறீர்கள்? பாக்கி எவ்வளவு இருக்கிறது என்ற விபரங்களை அமித்ஷா டெல்லியில் இருந்து கூட தெரிவிக்கலாம். ஊடகம் வாயிலாக அமித்ஷாவுக்கு கேள்வி எழுப்புகிறோம். இதற்கெல்லாம் அவர் விளக்கம் அளிக்க வேண்டும்.
2014 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் விவசாய விளைபொருட்களுக்கு விலை இரட்டிப்பாக வழங்கப்படும், காங்கிரஸ் கட்சி செயல்படுத்தாத வேளாண் விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதன் கமிட்டியை நாங்கள் செயல்படுத்துவோம் என கூறினார்கள். இன்றுவரை இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

அண்மையில் அறிவித்த விலை உயர்வு என்பது கண்துடைப்பு நாடகம். உத்திரபிரதேசத்தில் 2016 ஆம் ஆண்டு அகில இந்திய அளவில் நடைபெற்ற விவசாய சங்கங்களின் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விவசாய விலைப் பொருட்களுக்கு இரட்டிப்பு விலை வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார் அந்த வாக்குரியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
அதன்பின் விவசாயிகளுக்கு எதிராக மூன்று சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு அதற்கு எதிராக 200 விவசாயிகள் உயிரிழந்து ஒண்ணேகால் ஆண்டு காலம் கடும் குளிரிலும் கடும் வெப்பத்திலும் போராடிய பின்னர் கடும் நெருக்கடி மற்றும் விமர்சனத்திற்கு பிறகு அந்த மூன்று சட்டங்களும் திரும்ப பெறப்பட்டது. அப்போது விவசாய விலை பொருட்களுக்கான விலை நிர்ணயம் செய்வதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தார். இந்த வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை கொடுக்கப்படும் என்ற வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் வேலையில் இருந்த லட்சக்கணக்கான பணியாளர்கள் பல்வேறு நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர்.
வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் அனைத்தும் விற்கப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்படும். ஒவ்வொரு இந்தியனில் வங்கி கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் செலுத்தப்படும் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.
இவற்றுக்கெல்லாம் பிரதமர் மோடி எந்த பதிலும் சொல்லவில்லை. கர்நாடக தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா தீவிரமாக கலந்து கொண்டனர். அதே நேரத்தில் மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் வெடித்தது. கடைகள் வீடுகள் தீப்பிடித்து எரிந்தது காவல் நிலையத்தில் இருந்த துப்பாக்கிகள் கூட திருடு போயின. அந்த சமயத்தில் அமைதியை திரும்ப கொண்டு வர பிரதமர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து அவர் இன்று வரை எந்த கருத்தும் பேசவில்லை. அமைதியாக இருங்கள் இன்று வேண்டுகோள் விடுவதற்கு கூட அவர் தயாராக இல்லை.
பாராளுமன்ற புதிய கட்டடம் திறந்த மே 28-ம் தேதி என்பது விடுதலைப் போராட்ட காலத்தில் வெள்ளையனிடம் ஆதரவாக இருந்து மன்னிப்பு கடிதம் கொடுத்து சிறையில் இருந்து வெளியே வந்த வீரசாவர்கர் பிறந்தநாள். மகாத்மா காந்தியை சுட்டு கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதில் பங்கேற்ற நபர். அவரது பிறந்தநாளில் நாடாளுமன்ற புதிய கட்டிடம் திறக்கப்படுகிறது. நாட்டின் விடுதலைக்காக ஒன்பது ஆண்டு காலம் சிறையில் இருந்த பண்டித ஜவஹர்லால் நேருவின் உடைய நினைவு நாள் மே 27ஆம் தேதி. இந்தியா தலை நிமிர்ந்து நிற்க பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினார். மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பொதுத்துறை நிறுவனங்கள் அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. நாட்டின் முதல் குடிமகனாக உள்ள குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பெண்மணி என்பதாலும் அவர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அவர் விதவை என்பதாலும் அவர் நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழாவிற்கு முறையாக அழைக்கப்படவில்லை. அவரைக் கொண்டு புதிய கட்டிடம் திறக்க வேண்டும் என்ற 20 கட்சியினரின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.
இது 140 கோடி மக்களுக்கும் நேர்ந்த அவமானம். மகாபாரத கதையில் திரௌபதி துகில் உரிக்கப்பட்டு அவமானப்படுத்தப்படுவார். அதே போல் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆட்சியாளர்களால் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்.
இதற்கெல்லாம் நாட்டு மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள். கர்நாடக மாநில மக்கள் நல்ல வழியை காட்டி இருக்கிறார்கள். வரும் 23ஆம் தேதி அனைத்து கட்சிகளின் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் திமுக கம்யூனிஸ்ட் உட்பட அனைத்து கட்சிகளும் கலந்து கொள்ள உள்ளனர். வரும் நாடாளுமன்ற தேர்தலை அனைத்துக் கட்சிகளும் திறம்பட எதிர்கொள்ளும். பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்தும். புதிய ஆட்சியை ஒன்றியத்தில் அமைக்கும்.
அமித்ஷா வந்திருந்த போது சில நிமிடங்கள் மின்தடை ஏற்பட்டது. இதை அரசியல் ஆக்க வேண்டாம் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய நிலையில் உள்துறை அமைச்சராக இருக்கக்கூடிய அமித்ஷா பேசும்போது நான் எந்த இருட்டையும் சந்திப்பதற்கு தயாராக இருப்பதாக அரசியல் ஆக்குகிறார்.
தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு என்பது இல்லை. சரியாகத்தான் மின்சாரம் வழங்கப்படுகிறது. மின் கட்டணம் உயர்வு செய்யப்படும் என அறிவிப்பு வெளியானது. இந்திய கம்யூனிஸ்ட் சொல்லிட்ட பல்வேறு கட்சிகள் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என்று முதல்வரிடம் வலியுறுத்தினோம். கோரிக்கையை அரசு ஏற்று வீடுகள் குடிசைத்தொழில் கைத்தறி மற்றவைகளுக்கு உள்ள சலுகை தொடரும். மின் கட்டணம் உயர்த்தப்படாது என தெரிவித்திருக்கிறார்கள். வணிக நிறுவனங்களுக்கு கட்டணம் உயர்த்தப்படும் என அறிவித்துள்ளனர். இதையும் அரசு பரிசீலனை செய்து கைவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
சாலை ஓரங்களில் பேனர்கள் வைப்பதற்கு அரசு சார்பில் கடுமையான அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது. பேனர்களால் உயிரிழப்பு ஏற்பட்டு இருந்தால் பேனர் வைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும். உயிரிழந்த குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed