


மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 5 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை இராமநாதபுரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்து மறைந்த பி.கே.மூக்கையாத்தேவருக்கு உசிலம்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து உசிலம்பட்டி பகுதியில் மூக்கையாத்தேவருக்கு மணிமண்டபம் அமைக்க பல்வேறு இடங்களை வருவாய்த்துறை சார்பில் தேர்வு செய்து மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பினர்.

இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் இன்று உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் பழைய கட்டிடங்கள், பழைய விடுதி பகுதிகளை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் பி.மூர்த்தி., மூக்கையாத்தேவருக்கு மணிமண்டபம் மட்டுமல்லாது நூலகம், திருமண மண்டபம் கட்டி அனைத்து மக்களுக்கு பயன்பெரும் வகையில் அமைக்க வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
அதன்படி அரசு மேல்நிலைப்பள்ளியின் பழைய கட்டிடம் மற்றும் விடுதி இருந்த இடம் சுமார் ஒன்றரை ஏக்கர் அளவில் இருப்பதால் மணிமண்டபம் அமைக்க தேவையானதாக உள்ளதாக கூறி இதே இடத்தை மணிமண்டபம் அமைக்க வருவாய்த்துறை வழங்க வேண்டும் என அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

இந்த அரசு மேல்நிலைப்பள்ளியில் தான் பி.கே.மூக்கையாத்தேவர் பள்ளி படிப்பை முடித்தார் என்ற வரலாறும் உள்ள சூழலில் விரைவில் உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் பழைய கட்டிடங்கள் இருந்த இடத்தில் விரைவில் | மூக்கையாத்தேவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

