• Fri. Mar 20th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

கனமழையால் தென்னை, வாழை மரங்கள் சாய்ந்து பாதிப்பு..,

ByPuthar Pandian P

Mar 19, 2026

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே மல்லணம் பட்டி, குரும்ப பட்டி, மேல கோவில்பட்டி கிராமங்களில் எதிர்பாராத விதமாக வீசிய பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய கனமழையால் விவசாயிகளின் வாழ்வாதாரம் அடியோடு சரிந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வத்தலகுண்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கோடை மழை பெய்து வரும் நிலையில், திடீரென நிலச்சரிவை ஏற்படுத்தும் வகையிலான சூறாவளி காற்றும் கனமழையும் வெளுத்து வாங்கியது. இந்த இயற்கைச் சீற்றத்தினால், அப்பகுதியில் சுமார் 50ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட குலை தள்ளிய வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து நிலைகுலைந்தன.

மேலும், 25 ஆண்டுகளாக வளர்த்து வந்த நீண்ட காலப் பயிரான தென்னை மரங்களும் தப்பவில்லை; சுமார் 2000-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இந்த பெரும் பாதிப்பினால் மல்லணம் பட்டி, குரும்ப பட்டி, மேலக்கோவில்பட்டியைச் சேர்ந்த விவசாயிகளான முருகன், சின்னச்சாமி, பாலு,கணேசன், அன்பு செல்வம் |செல்வராஜ், ஆகியோரது விளைநிலங்கள் உருக்குலைந்துள்ளன.

இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயி பாலு மிகுந்த வேதனையுடன் தெரிவிக்கையில், பல லட்சம் ரூபாய் முதலீடு செய்து, கிராம வங்கிகளில் கடன் பெற்றும், குடும்ப உறுப்பினர்களின் தங்க நகைகளை அடகு வைத்தும் மிகவும் கஷ்டப்பட்டு இந்த விவசாயத்தைச் செய்து வந்ததாகக் குறிப்பிட்டார். அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், ஒற்றை நாள் மழையும் சூறாவளிக் காற்றும் தங்கள் ஓராண்டு உழைப்பையும் கனவையும் சிதைத்துவிட்டதாக அவர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கிராம நிர்வாக அதிகாரிகள் சேதமடைந்த வாழை மற்றும் தென்னை மரங்களைப் பார்வையிட்டு விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலங்களை முறையாகக் கணக்கெடுத்து, அதன் அறிக்கையை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பும் பணிகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இருப்பினும், இந்தப் பகுதியில் பயிர் காப்பீடு குறித்த போதிய விழிப்புணர்வு விவசாயிகளிடையே இல்லாதது தற்போது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் இழப்புகளைச் சமாளிக்கக் காப்பீடு ஒரு பாதுகாப்பு அரணாக இருந்திருக்கும் என்ற போதிலும், அது குறித்த தகவல் அறியாததால் விவசாயிகள் இப்போது மொத்த இழப்பையும் தாங்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தற்போது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் வத்தலக்குண்டு பகுதி விவசாயிகள், மாவட்ட நிர்வாகமும் வேளாண்மைத் துறையும் உரிய இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

சூறாவாளி காற்றுடன் பெய்த மழையால் அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.