கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் வெள்ள சேத பகுதிகளில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறின. சீர்காழியில் வரலாறு காணாத மழை கொட்டி தீர்த்ததால் விளை நிலங்கள் நீரில் மூழ்கியதோடு, குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்தது. பல இடங்களில் வீடுகள் சேதம் அடைந்தன. பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். மழைநீர் வடிவதற்கான பணிகளையும், நிவாரண உதவி வழங்கும் பணியையும் அரசு முடுக்கி விட்டுள்ளது. இதற்கிடையே மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் புதுச்சேரி சென்றார். அங்கிருந்து கார் மூலமாக நேற்று காலை கடலூர் மாவட்டத்துக்கு சென்றார். அங்கு குறிஞ்சிப்பாடி தாலுகா கீழ்பூவாணிக்குப்பம் பகுதியில் 140 எக்டேர் வேளாண் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து கடலூர் மற்றும் குறிஞ்சிப்பாடி பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட 14 பயனாளிகளுக்கு 72 ஆயிரத்து 400 ரூபாய் மதிப்பிலான நிவாரண உதவிகளையும், வேட்டி, சேலை, 10 கிலோ அரிசி அடங்கிய நிவாரண பொருட்களையும் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதன்பின்பு சிதம்பரம் தாலுகா வல்லம்படுகைக்கு சென்று வெள்ள பாதிப்புகள் குறித்து அமைக்கப்பட்டுள்ள புகைப்பட காட்சிகளை முதல்வர் பார்வையிட்டார். மேலும் விவசாயிகளிடம் பாதிப்புகளை கேட்டறிந்தார். பின்னர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சென்ற மு.க.ஸ்டாலின், சீர்காழி வட்டம், பச்சைபெருமாநல்லூர் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக தங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமிற்கு சென்று
பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, பச்சைபெருமாநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமை அவர் ஆய்வு செய்தார். தொடர்ந்து, உமையாள்பதி காலனியில் மழை நீரால் சூழ்ந்துள்ள குடியிருப்புகளையும், சேதம் அடைந்த வீடுகளையும் முதல்வர் பார்வையிட்டார்.
பின்னர், உமையாள்பதி கிராமத்தில் 221 எக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் கனமழையால் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டு உள்ளதை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்து, விவசாயிகளிடம் பயிர் பாதிப்புகளை கேட்டறிந்தார். விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் அச்சப்பட
தேவையில்லை. உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து தரும் என்று அவர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, சீர்காழி பஸ் நிலையத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகளுடன் கனமழையால் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்கள் குறித்தும், பயிர்களுக்கான இழப்பீடு வழங்குவது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எஸ்.ரகுபதி, செந்தில்பாலாஜி, சிவ.வீ.மெய்யநாதன், சி.வி.கணேசன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
ஆய்வு முடிவில் சீர்காழியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் மயிலாடுதுறை, சீர்காழி போன்ற பகுதிகளில்தான் அதிக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதனால்தான், இங்கு அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்களை அனுப்பி வைத்து உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினேன். இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள மீட்பு, நிவாரண பணிகள் திருப்தியாக உள்ளன. இன்னும் சில குறைகள் உள்ளன. அவை விரைவில் தீர்த்து வைக்கப்படும்.
சேதம் அடைந்த நெற்பயிர்கள் குறித்து கணக்கெடுக்க அறிவுறுத்தி உள்ளேன். எதிர்க்கட்சிகள் அரசியலுக்காக ஏதாவது சொல்வார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதற்கேற்றவாறு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே மழையால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை துடைக்கும் வகையில் மு.க.ஸ்டாலின், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்க உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:- மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக முதல்வர் அந்த வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1,000 வழங்க உத்தரவிட்டு உள்ளார். 14-ந் தேதி (நேற்று) மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின்னர் முதல்வர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும் கடும் மழையினால் சேதம் அடைந்துள்ள பயிர்கள் முறையாக கணக்கெடுப்பு செய்யப்பட்டு, உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.