• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வடகிழக்கு பருவமழை: ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!..

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், இது தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியருடன் தமிழக முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், பெரும்பாலான அணைகள், நீர்த்தேக்கங்கள், ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. எனவே, அவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அணைகளில் உடைப்பு ஏற்படாமல் இருக்க அவ்வப்போது உபரி நீரை வெளியேற்றி, அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். உபரி நீர்த் திறப்பு குறித்து பொது மக்களுக்கு உரிய முன்னெச்சரிக்கைகளை வழங்கி உபரி நீரை திறந்துவிட வேண்டும்.

நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றி, நிலத்தடி நீரைச் செறிவூட்டவும், வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றவும், தாழ்வாகச் செல்லக்கூடிய மின் கடத்திகளை சரிசெய்யவும், உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மழைக் காலங்களில் நோய்கள் அதிகம் உருவாகி, பரவிடக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்கிறது. அதனைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மழைநீர் தேங்குவதால் பயிர்கள் மூழ்கி சேதமாகும் சூழல் ஏற்பட்டு விடக்கூடாது. எனவே, வடிகால்களை தூர்வார வேண்டும். அறுவடை செய்த நெல்மணிகளும் பாதுகாக்கப்பட வேண்டும். உயிர்காக்கும் மருந்துகள், மருந்து உபகரணங்கள், பாம்பு கடிக்கான மாற்று மருந்தும், ஆக்சிஜன் உருளைகள், மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகள் போன்றவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

பாதிப்பிற்குள்ளாகும் மக்களை மீட்கும்போது, மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள், வயதானவர்களுக்கு முன்னுரிமை அளித்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை மாவட்ட ஆட்சியர்கள் தாமதமின்றி வழங்க வேண்டும்.

இதற்கு அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அனைத்துத் துறைகளுடைய ஒருங்கிணைப்புதான், அனைத்து பகுதிகளிலும் ஏற்படக்கூடிய அனைத்து பாதிப்புகளையும் தடுக்க முடியும்” என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.