• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இன்று திறப்பு..!

Byவிஷா

Dec 30, 2023

சென்னையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை, இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
வெளியூர்களில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு செல்லும் பேருந்து நகரத்துக்குள் இயங்குவதாலும் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் சூழல் உருவாகிறது. இதற்கு மாற்று ஏற்பாடாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையதில் கட்டுமான பணிகள் முடிந்தாலும், இணைப்பு சாலைகள், மழைநீர் வடிகால் பணிகள் போன்றவை காரணமாக பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதனால் திறப்பு விழாவில் தாமதம் ஏற்பட்டது. பிரதான முனையத்தில் 130 அரசு பேருந்துகள், 85 ஆம்னி பேருந்துகள் பயன்படுத்தும் வகையில் இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநகர பேருந்துகளுக்கு 5 ஏக்கர் பரப்பளவில் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. காவல் நிலையம், போக்குவரத்து கழகங்களுக்கான பணிமனை உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கடைகள், உணவகங்கள், துரித உணவகங்கள், பயணச்சீட்டு வழங்கும் இடங்கள், மருத்துவ மையம், தாய்ப்பால் ஊட்டும் அறை, ஏ.டி.எம். மையம், பொருட்கள் பாதுகாப்பு அறை, கண்காணிப்பு கேமராக்கள், விசாலமான கழிப்பறைகள், ஓட்டுநர், நடத்துனர் ஓய்வெடுக்கும் அறை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பேருந்து நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சனிக்கிழமை (30 ஆம் தேதி) காலை 11 மணியளவில் திறந்து வைக்கிறார். பேருந்து நிலையத்தின் நுழைவு வாயிலில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழக முதல்வர் 5 அரசு பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார். நெடுந்தூர பேருந்துகளுக்கு தனியாக நடைமேடைகளும், சென்னை மாநகர பேருந்துகளுக்கு தனியாக நடைமேடைகளும், ஆம்னி பேருந்துகளுக்கு தனியாக வழியும் அமைக்கப்பட்டுள்ளன.
திறப்பு விழாவில் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. மேலும், பாதுகாப்பு பணிகளுக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். நிகழ்ச்சிக்கு வரும் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திமுகவினர் திட்டமிட்டு உள்ளனர். ஆலந்தூர், பல்லாவரம், குரோம்பேட்டை, சானட்டோரியம், தாம்பரம், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.