• Wed. Apr 24th, 2024

சினிமா விமர்சனம்
கடைசி விவசாயி

விவசாயத்தை தங்களது வணிக நோக்கத்துக்காக மட்டுமே இதுவரை தமிழ் சினிமாவில் பெரும்பான்மையாக பயன்படுத்தப்பட்டு திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதுஆத்மார்த்தமாக விவசாயம் அதன் முக்கியத்துவம் பற்றிய புரிதல் இல்லாமல் கார்ப்பரேட் விவசாயத்தை அழிக்கிறது என்கிற நோக்கத்திலேயே விவசாயம் சம்பந்தப்பட்ட படங்கள் இதுவரை எடுக்கப்பட்டு வருகிறது அதில் இருந்து விவசாயம் என்பது வாழ்வியல் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது
கடைசி விவசாயி படம்
எத்தனை வயதானாலும் விவசாயம் செய்வதை விட்டுவிடக் கூடாது என நினைக்கும் விவசாயிகள் இப்போதும் குக்கிராமங்களில் வாழ்கிறார்கள்
இவர்களைபோன்ற விவசாயிகள் இருப்பதால்தான் மனிதகுலத்திற்கு உண்ணும் உணவு எந்த ஒரு தடையும் இல்லாமல் கிடைக்கிறது என்பதைஇயக்குனர் மணிகண்டன் ஒரு யதார்த்த வாழ்வியலை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். விஜய் சேதுபதி, யோகி பாபு தவிர படத்தில் நடித்துள்ள மற்றவர்கள் இதற்கு முன்பு சினிமாவில் நடிக்காதவர்கள் அவரவர் கதாபாத்திரங்களாகவே திரையில் தெரிகிறார்கள். வசூலுக்காகவும், பிரபலம் ஆவதற்காகவும் மசாலா சினிமாக்களை எடுக்கும் இயக்குனர்களுக்கு மத்தியில் இம்மாதிரியான படங்களை எடுப்பதற்கும் தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியம் கலந்த பெருமை.கிராமத்தில் பல வருட மரம் ஒன்றின் மீது இடி விழுந்து அழிந்து போகிறது. குல தெய்வத்திற்கு திருவிழா நடத்தாதே இதற்குக் காரணம் என ஊர் பஞ்சாயத்து கூடிப் பேசி திருவிழா நடத்த திட்டமிடுகிறார்கள். குல தெய்வப் படையலுக்காக ஒவ்வொரு வீட்டில் இருந்தும் ஒரு மரக்கா நெல்கொடுக்க வேண்டும் ஆனால் வானம் பொய்த்து போனதால் விவசாயம் செய்யாத ஊரில்
ஊரின் வயதான விவசாயி நல்லாண்டிதனக்கான தேவைக்கு மட்டும் விவசாயம் செய்து வருகிறார் அதனால் அவரிடம் நெல்லைப் பயிரிட்டு தரச் சொல்கிறார்கள். அவரும் தனது நிலத்தில் பயிரிட ஆரம்பிக்கிறார். ஒரு நாள் நிலத்தின் அருகே மயில்கள் இறந்து கிடக்க அதை எடுத்து புதைக்கிறார். ஆனால், மயில்களைக் கொன்று புதைத்ததாக அவர் மீது பொய் வழக்கு தொடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். ஊர் திருவிழாவிற்காகப் பயிரிடப்பட்ட நெல் வயலைப் பராமரிக்க சிக்கல் வருகிறது. சிறையிலிருந்து விடுதலையாகி நல்லாண்டி வெளியில் வந்தாரா, எந்த பாதிப்பும் இல்லாமல் நெல் அறுவடையாகி வந்ததா, ஊர் திருவிழா நடந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
கிராமம், அங்குள்ள இயல்பான மனிதர்கள், ஊர்த் திருவிழா, எழுந்து அடங்கும் சாதிப் பிரச்சினை, போலீசாரின் பொய் வழக்கு, நேர்மையாக விசாரிக்கும் நீதிபதி என ஒரு விவசாய கதைக்குள் திரைக்கதையிலிருந்து விலகாமல் என்னென்ன அரசியல் பிரச்சினைகளைப் பேச முடியுமோ அவற்றை உள்ளது உள்ளபடி சொல்லியிருக்கிறார் இயக்குனர் மணிகண்டன்.
மாயாண்டி என்ற வயதான விவசாயி ஆக நல்லாண்டி. படம் வெளியாகும் போது அவர் இந்த உலகத்திலேயே இல்லை என்பது வருத்தமான விஷயம். எந்த ஒரு காட்சியிலும் அவர் நடித்திருக்கிறார் என்று சொல்ல முடியாது. நிலம், நெல், விவசாயம், ஊர் திருவிழா, மாடு, கோழி என அனைத்தின் மீதும் பாசமான ஒரு மனிதரை இந்தக் காலத்தில் இந்தத் தலைமுறை பார்த்திருக்குமா என்பது சந்தேகம்தான். எப்போதுமே ஒரு தீர்க்கமான பார்வை, அத்தனை வயதிலும் தள்ளாத நடை, தளர்வில்லாத உழைப்பு, சிறைக்குச் சென்றாலும் நெல்லுக்கு என்ன ஆச்சோ என்ற பதைப்பு என மாயாண்டி கதாபாத்திரத்தில் நல்லாண்டி அவராகவே வாழ்ந்திருக்கிறார்.
தனது முறைப் பெண் அகால மரணமடைந்த காரணத்தால் புத்திபேதலித்து
ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருப்பவராக விஜய் சேதுபதி. முருகன் மீது அளவு கடந்த பக்தி கொண்ட பக்தர். படத்தில் இந்தக் கதாபாத்திரம் இருந்தாலும் இல்லையென்றாலும் படத்திற்கு பாதகமும் இல்லை, சாதகமும் இல்லை. ஒரு நல்ல படத்தில் நாமும் இருக்க வேண்டும் என விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்அதேபோன்று யோகி பாபுவும் கூட இருக்கிறார் ஊரில் இருக்கும் நிலங்களை விற்று யானை வாங்கி அதை வைத்து பிழைப்பு நடத்தும் கதாபாத்திரம் யோகி பாபுவுக்கு. இரண்டு, மூன்று காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார்.
படத்தில் இருக்கும் முக்கியமான ஒரே பெண் கதாபாத்திரம் நீதிபதி. பெண் நீதிபதியாக ரெய்ச்சல் ரெபேகா. யதார்த்தமான நீதிபதியை சினிமாவில் பார்ப்பதும் ஆச்சரியம்தான். மண் மீதும், மனிதர்கள் மீதும் பாசமான ஒரு நீதிபதியாக ரெய்ச்சல் இயல்பாக நடித்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் புதுமுகங்கள் கூட அவரவர் கதாபாத்திரங்களில் ரசிக்க வைக்கிறார்கள்.
சந்தோஷ் நாராயணன், ரிச்சர்ட் ஹார்வி இருவரது இசையும் தேவையான இடங்களில் மட்டும் ஒலிக்கிறது. இயக்குனர் மணிகண்டனே ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். சினிமாத்தனமில்லாத ஒளிப்பதிவு.
தமிழ் சினிமாவில் ஒரு அழுத்தமான பதிவு இந்த
‘கடைசி விவசாயி

கடைசி விவசாயி – மண் காவலன்

தயாரிப்பு – டிரைபல் ஆர்ட்ஸ்
இயக்கம் – மணிகண்டன்
இசை – சந்தோஷ் நாராயணன், ரிச்சர்ட் ஹார்வி
நடிப்பு – நல்லாண்டி, விஜய் சேதுபதி, யோகி பாபு
வெளியான தேதி – 11 பிப்ரவரி 2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *