

போபாலில் உள்ள கமலா நேரு மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 4 குழந்தைகள் உயிரிழந்தனர்.
தற்போது வரை மொத்தம் 36 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்துக்கான காரணம் சிலிண்டர் வெடித்ததாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

புகை மூட்டம் அதிகமாக இருப்பதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் மருத்துவக் கல்வி அமைச்சர் விஸ்வாஸ் சாரங், டிஐஜி இர்ஷாத் வாலி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். இது குறித்து அவர் கறுகையில், குழந்தைகள் வார்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளதாகவும், வார்டில் 40 குழந்தைகள் இருந்தனர் அவர்களில் 36 பேர் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த குழந்தைகளுக்கு முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இரங்கல் தெரிவித்ததுடன், விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்தார். இறந்தவர்களின் பெற்றோருக்கு தலா 4 லட்சம் ரூபாய் கருணைத் தொகை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
