• Tue. May 7th, 2024

தாயின் இறப்புக்கு கூட வராத பிள்ளைகள்..!

Byவிஷா

Jan 25, 2024

கேரளாவில் பெற்ற தாயை அநாதையாக தவிக்க விட்டதோடு அல்லாமல், அவரின் இறப்புக்கு கூட அவரது மகனும், மகளும் வராத சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்பத்தில் பங்கு கொள்ளாவிட்டாலும், துன்பத்தில் அவசியம் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால், கேரளாவில் ஒரு கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. தாய் இறந்த பிறகும், அவருக்கு இறுதிச் சடங்கு பண்ணுவதற்கு கூட அந்தத் தாயின் மகனும், மகளும் வராதது கல் நெஞ்சையும் கரைய வைக்கிறது.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் குமுளி அட்டப்பள்ளம் காலனியில் தனியாக வசிக்கும் விதவைத் தாய் உயிருக்குப் போராடியும் பெற்ற பிள்ளைகள் உதவிக்கு வராததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விசாரணையில் அவரது பெயர் அன்னக்குட்டி என்பதும், அவருக்கு 55 வயதில் ஷாஜி என்ற மகனும், சிஜி என்ற மகளும் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரது மகன் ஷாஜியை போலீசார் பலமுறை போனில் தொடர்பு கொண்டபோது நாய்க்கு உணவளிப்பதால் வர முடியவில்லை என அவர் கூறிய பதிலை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சில மணி நேரங்கள் ஆகியும் மூதாட்டி உயிரிழந்தும், அவர் பெற்ற பிள்ளைகள் வராததால், மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர் மற்றும் போலீஸார் இணைந்து இறுதிச் சடங்குகளை செய்தனர். அடக்கம் செய்வதற்கு முன், பேருந்து நிலைய வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த அன்னக்குட்டியின் உடலுக்கு கிராம மக்கள் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அவரது மகன் ஷாஜி கூட்டத்துடன் சேர்ந்து தனது தாயின் உடலை தூரத்தில் பார்த்ததாக கூறப்படுகிறது. இவர் கேரள வங்கி ஊழியர். மகள் பஞ்சாயத்தில் ஒப்பந்த ஊழியராக உள்ளார். இதில் தாயாரின் நிலம் தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது தெரியவந்தது.
வயதான தாயை கவனிக்காமல் கைவிட்டு சென்ற மகன் மற்றும் மகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இருவரின் பணியையும் பறிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *