


கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும், உணவும் கொடையளிப்போம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 27-ம் தேதி முதல் வெப்பத்தின் அளவு 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் வறண்ட வானிலை நீடித்து வருவதால் எப்போதும் இல்லாத அளவாக அதிகபட்சமாக 106 டிகிரி வெயில் கொளுத்தியது. நேற்று முன்தினமும் மதுரையில் 104 டிகிரி வரை வெயில் வாட்டி வதைத்தது. நீலகிரி, சென்னை, மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரையில் இயல்பைவிட அதிகமாக வெப்பநிலை இருந்தது.

தஞ்சாவூர், கடலூர், தர்மபுரி, ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், மதுரை, சேலம், திருவள்ளூர், ராமநாதபுரம், நீலகிரி, வேலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பநிலை அதிகரித்தது. அதன் தொடர்ச்சியாக ஈரோடு, சேலம், வேலூர் மாவட்டங்களில் நேற்று 102 டிகிரி வெயில் கொளுத்தியது. தர்மபுரி, கரூர், திருச்சி, மதுரை மாவட்டங்களில் 100 டிகிரி, பாளையங்கோட்டை, கோவை 99 டிகிரி, சென்னை 97 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.
வெயிலின் தாக்கத்தால் மனிதர்கள் மட்டுமின்றி பறவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெயிலின் காரணத்தால் நீர்நிலைகள் காய்ந்து வருகின்றன. இதனால் நீரும், உணவும் கிடைக்காமல் பறவைகள் தவித்து வருகின்றன. இந்த நிலையில், கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும், உணவும் கொடையளிப்போம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன் மாடியில் பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கும் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

