குறிச்சி தொழிற்பேட்டை வளாகத்தில் 23 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள தொழிலாளர்கள் விடுதியினை தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக்கழகத்தின் சார்பில், குறிச்சி தொழிற்பேட்டை வளாகத்தில் 23 கோடி மதிப்பில் மூன்று மாடி கட்டிடத்தில், 98.812 சதுர அடியில், தொழிலாளர் தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகிறது. தொழிலாளர் தங்கும் விடுதியில் மூன்று தளங்களில் 111 அறைகள் உள்ளன.
இதில் ஏ பிரிவில் 345 சதுர அடியில், ஒரு அறை, சமையலறை, குளியலறை மற்றும் கழிப்பறை என தளத்திற்கு 22 அறைகள் வீதம் 66 அறைகள் கட்டப்பட்டுள்ளன.
பி பிரிவில் 450 சதுர அடியில் , பொது கழிப்பறை மற்றும் குளியலறை உள்ளிட்ட வசதிகளோடு, தளத்திற்கு 15 அறைகள் வீதம் 45 அறைகள் கட்டப்பட்டுள்ளன. மூன்று கட்டிடத்திலும் சேர்த்து 528 தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் இந்த விடுதி கட்டப்பட்டுள்ளது.
90 சதவிகிதம் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், கோவையில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் , தொழிலாளர் விடுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு வீட்டு வசதிவாரியத்துறை அமைச்சர் முனுசாமி, செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் முத்துச்சாமி, மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி, மனிதவள மேம்பாட்டுத்துறை கயல்விழி செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.