இரண்டு நாள் சுற்று பயணமாக முதலமைச்சர் கோவை வந்தார். பாதுகாப்பு பணிக்காக 1000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் இருந்து விமான மூலம் கோவை வந்த முதலமைச்சருக்கு விமான நிலையத்தில் திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது . அதனை தொடர்ந்து மதியம் 12 மணியளவில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் கோவை விளாங்குறிச்சியில் 158 கோடியே 32 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் எல்காட் கட்டிடத்தை முதலமைச்சர் திறந்து வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து மதியம் 12.45 மணியளவில் காளபட்டி பகுதியில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் கோவை வடக்கு, கோவை தெற்கு மற்றும் பேரூர் வட்டத்தைச் சேர்ந்த கிராமங்களில் உள்ள நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்களித்து ஆணை வழங்கப்பட்டு, அதற்கான செயல்முறை ஆணைகளை நில உரிமையாளர்களுக்கு முதலமைச்சர் வழங்குகிறார். அதே போல சூலூர் இராணுவ தளவாடங்கள் பூங்கா ஒதுக்கீடு ஆணைகள் வழங்குகிறார்.
இதனை அடுத்து அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்கும் அவர் மாலை 4 மணி அளவில் பொற்கொல்லர்களுடன் கலந்துரையாடுகிறார். தொடர்ந்து மாலை 5 மணி அளவில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.இதனை அடுத்து அரசு விருந்தினர் மாளிகை இரவு ஓய்வெடுக்கிறார்.
நாளை 6ஆம் தேதி காந்திபுரம் சிறைச்சாலை மைதானத்தில் கலைஞர் நூலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி வைக்கிறார். அதை தொடர்ந்து செம்மொழி பூங்கா பணிகளை ஆய்வு மேற்கொண்டு, பின்னர் கோவையிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் செல்கிறார். இந்நிலையில் முதலமைச்சர் வருகையொட்டி கோவை மாநகரப் பகுதியில் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.