கடந்த 2 நாட்களாக சென்னையில் மிக அதிக மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்ததுடன் சாலைகளிலும் தண்ணீர் ஆறுபோல் ஓடியது. ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
ஆவடியில் அதிகபட்சமாக 20 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்ததால் எங்கு பார்த்தாலும் தண்ணீர் சூழ்ந்து இருந்தது. எனவே, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட இன்று காலையில் திருவேற்காடு பகுதிக்கு சென்றார்.

அங்கு மழை வெள்ளத்தில் நடந்து சென்று பார்வையிட்ட பிறகு பத்மாவதி நகருக்கு சென்றார். அவருடன் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் உடன் சென்றார். மழையால் பாதிப்படைந்து அங்குள்ள ஒன்றிய மேல்நிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டு இருந்த பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
பொது மக்கள் சொன்ன குறைகளை கேட்டறிந்தார். அதன் பிறகு ஆவடி பகுதிக்கு சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். மழைநீரில் வடிய வைக்க மேற்கொள்ளும் பணிகளை ஆய்வு செய்தார். அங்குள்ள ஸ்ரீராம் நகர், திருமுல்லைவாயல், கணபதி நகர் ஆகிய இடங்களுக்கு சென்று பார்வையிட்டார்.
அங்கிருந்து பூந்தமல்லி அம்மன் கோவில் தெரு, எம்.ஜி.ஆர். நகர் பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டார். அவருடன் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உடன் சென்றிருந்தனர்.
தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அகற்ற முதல்வர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆவடி, திருவேற்காடு, திருமுல்லைவாயல், அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் வெள்ள நீர் தேங்காமல் இருப்பதற்கு நிரந்தர தீர்வு காணவும் விரிவான திட்டம் வகுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
புறநகர் பகுதிகளில் வெள்ள சேதம் குறித்து கணக்கெடுக்குமாறும் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். எவ்வளவு வீடுகள் சேதம் அடைந்துள்ளது? என்ற விவரங்களை விரிவாக தருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஆய்வு பணிகள் முடிந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்பினார். முன்னதாக நேற்று இரவும் மு.க.ஸ்டாலின் சென்னை தி.நகர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வு மேற்கொண்ட பகுதிகளில் அனைத்திலும் அவர் மழை நீரில் இறங்கி ஆய்வு மேற்கொண்டதுடன், மக்களுக்கு ஆறுதலும், நிவரான பொருட்களையும் வழங்கினார்.