பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, முதல்வர் ஸ்டாலின் நேற்று சேலம் வருகை தந்தார். தொடர்ந்து தனது நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்ட அவர், இரவு காரில் தர்மபுரி கிளம்பி சென்றார். அப்போது அதியமான் கோட்டையில் கூடியிருந்த மக்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது திடீரென அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்குள் ஸ்டாலினின் கார் சென்றது.
காரிலிருந்து இறங்கிய முதல்வர் ஸ்டாலின், அங்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி 1988 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டியதாக இடம்பெற்றிருந்த கல்வெட்டை நெகிழ்ச்சியுடன் பார்த்தார்.
பின்னர் காவல் நிலையத்திற்குள் சென்று, எஸ்.ஐ.,யின் இருக்கையில் அமர்ந்து ஆய்வு மேற்கொண்டார். காவல் நிலையத்திற்கு வந்த புகார்கள் குறித்தும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் கேட்டறிந்தார். மேலும், போலீசாருக்கு வார விடுப்பு சரியாக அமல்படுத்தப்படுகிறதா என்றும் கேட்டறிந்த ஸ்டாலின், போலீசாரின் குறைகள், கோரிக்கைகளை கேட்டறிந்தார்.இதையடுத்து அங்கிருந்த பெண் காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். காவல் நிலையத்திலிருந்து புறப்பட்டபோது, காவலர் குடியிருப்பில் உள்ள சிறுவர்களிடம் முதலமைச்சர் நலம் விசாரித்தார். அப்போது அவர்கள் கோரியபடி காவலர் குடியிருப்பில் பூங்கா அமைத்து தருவதாக மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.
சுமார் 10 நிமிடங்களுக்கு பின் அவர் காவல் நிலையத்திலிருந்து கிளம்பி சென்றார். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.