• Fri. Apr 19th, 2024

4ஆவது முறையாக கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.

ஐ.பி.எல். 2021 சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதிய இறுதி ஆட்டம் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதுவரை சென்னை அணி 3 முறையும், கொல்கத்தா அணி 2 முறையும் கோப்பைகளை வென்றுள்ளன.

இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து சென்னை அணி பேட்டிங் செய்ய தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டுபிளிசிஸ் களமிறங்கினர். இதில் ருதுராஜ் 3 பவுனரிகள், 1 சிக்சர் என 32 ரன்களில் வெளியேறினார்.

அடுத்து வந்த ராபின் உத்தப்பா 3 சிக்சர்களை விளாசி 31 ரன்களில் வெளியேற, மறுமுனையில் அதிரடி காட்டிய டுபிளிசிஸ், 59 பந்துகளில் 7 பவுண்டரிகள், 3 சிக்சர்களை பறக்கவிட்டு 86 ரன்கள் குவித்தார்.

20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணியில் சுனில் நரேன் 2 விக்கெட்டுகளும், ஷிவம் மாவி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 193 ரன்கள் என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ஷுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர். இதில் ஷுப்மன் கில் 51 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 50 ரன்களும் குவித்து அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். ஆனால் இவர்களுக்குப் பிறகு வந்தவர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் ஆட்டம் சென்னை அணிக்கு சாதகமாக மாறியது.

இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. இதையடுத்து ஐ.பி.எல். 2021 இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி, சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்று பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *