• Thu. May 2nd, 2024

கடம்பூர் பேரூராட்சியில் மூன்று வார்டுகளுக்கு மறு தேர்தல் அறிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை..!

Byவிஷா

Feb 19, 2022

கடம்பூர் பேரூராட்சியில் 3 வார்டுகளுக்கான வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், அந்த வார்டுகளுக்கான மறுதேர்தல் அறிவிப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கடம்பூர் பேரூராட்சியில் 1, 2, 11 ஆகிய 3 வார்டுகளில் திமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ரத்து செய்யப்பட்டதையடுத்து அந்த வார்டுகளில் போட்டியிட்ட மூன்று சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகினார்கள். இந்தநிலையில் கடம்பூர் பேரூராட்சிக்கான ஒட்டுமொத்த தேர்தலையும் மாநில தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 சுயேட்சை வேட்பாளர்களின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
அந்த வழக்கின் மனுவில், ஓரிடத்தில் ஒருவர் மட்டும் போட்டியிடுகின்ற போது அவர்களில் ஒருவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் மற்றொருவர் தேர்தலில் வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்பதே விதி. அப்படி இருக்கும் போது இந்த விதியை மீறி மாநில தேர்தல் ஆணையம் செயல்பட்டு இருக்கின்றது. ஆகவே தேர்தலை ரத்து செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென கோரியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட மூன்று வார்டுகளில் மறு தேர்தலை அறிவிக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவினால் அந்த மூன்று திமுக வேட்பாளர்களும் அப்செட்டில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *