நெல்லை பாளையங்கோட்டை ராம்நகர் வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பாஜக சின்னமான தாமரை சின்னத்திற்கான பட்டன் வேலை செய்யாததால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.
நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 933 வாக்குச்சாவடிகளில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காலை 7 மணிமுதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நெல்லை மாநகராட்சியைப் பொறுத்தவரை பாளையங்கோட்டை, நெல்லை, மேலப்பாளையம், தச்சநல்லூர் ஆகிய நான்கு மண்டலங்களில் மொத்தம் 55 வார்டுகளுக்கு 491 வாக்குச்சாவடியில் தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் பாளையங்கோட்டை மண்டலத்துக்கு உட்பட்ட ராம்நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 316வது வாக்குச் சாவடியில் பாஜக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டிய பட்டன் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேலை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராம்நகர் பள்ளியில் மொத்தம் 13 வாக்குச்சாவடிகள் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டுள்ளதால் அங்கு அதிகளவில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். இதில் 316வது வாக்குச் சாவடியில் பொது மக்கள் வாக்களிக்கும் போது இவிஎம் மிஷினில் பாஜக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டிய இடத்தில் உள்ள பட்டன் வேலை செய்யாததால் வாக்காளர்கள் வாக்களிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
இதுகுறித்து அங்கிருந்த ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பத்து நிமிடத்தில் இயந்திரத்தில் கோளாறு சரி செய்யப்பட்டது. அதன் பிறகு மீண்டும் தற்போது வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. திடீரென பாஜக சின்னத்துக்கான பட்டன் இயந்திரத்தில் வேலை செய்யாதது பரபரப்பை ஏற்படுத்தியது.