• Fri. Apr 26th, 2024

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் விடமாட்டோம்.. செந்தில் பாலாஜி வழக்கில் ஐகோர்ட் அதிரடி!

Senthil balaji

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கை, ரத்து செய்யக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கு விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம், செப்டம்பர் 17ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

தற்போதைய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15ஆம் ஆண்டுகளில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி வருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில், செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

சென்னை எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்ய எதிர்ப்பு தெரிவித்து, உதவிப் பொறியாளர் தேர்வில் கலந்து கொண்ட இருவர் சார்பில் முறையிடப்பட்டது.  பணம் வாங்கிக்கொண்டு மற்றவர்களுக்கு வேலை வழங்கியதால், தகுதியானவர்களுக்கு வாய்ப்பு பறிபோய்விட்டதாக அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  அதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள், வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டனர்.

எத்தனை ஆண்டுகள் கழித்து பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாடினாலும் அவர்களை விசாரிக்க வேண்டியது உயர் நீதிமன்றத்தின் கடமை எனக் கூறிய நீதிபதி, இடையீட்டு மனுதாரர்கள் ஏற்கனவே தாக்கல் செய்து நிலுவையில் உள்ள வழக்கை, இந்த வழக்கோடு சேர்த்து பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 17ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *