• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

தமிழக அமைச்சரவையில் மாற்றம்:
உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆகிறார்

TN Government

தமிழக அமைச்சரவை 2-வது முறையாக மாற்றப்படுகிறது. கவர்னர் மாளிகையில் நாளை (புதன்கிழமை) காலை நடைபெறும் விழாவில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்கிறார்.
முதல்-வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின். பல தமிழ் சினிமாக்களிலும் நடித்து பிரபலமானவர்.
கடந்த ஆண்டு (2021) நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனார். கட்சியிலும் தி.மு.க. இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் உள்ளார். மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சிகள் உள்பட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று கட்சி வளர்ச்சிப்பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.
கடந்த மாதம் (நவம்பர்) 27-ந் தேதி உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அவருக்கு அமைச்சர்களும், கட்சியின் முன்னணி தலைவர்களும், மாவட்ட நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த விழாக்களில் பேசிய சில அமைச்சர்கள், உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுதவிர பல மாவட்டங்களில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்திலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தலைமைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
ஏற்கனவே தொகுதியில் நல்ல பெயர் எடுத்திருக்கும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நியமிக்கப்பட்டால் தமிழக மக்கள் அனைவருக்கும் சேவையாற்றுவார் என்று சில அமைச்சர்கள் மற்றும் தி.மு.க.வினரும் கருத்து தெரிவித்தனர். இதற்கிடையே உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சரவையில் சேர்க்கப்படுவார் என்ற உறுதியான தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க கவர்னர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்தார். இதனை கவர்னர் ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு கிண்டி கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. இதில் கவர்னர் ஆர்.என்.ரவி, உதயநிதி ஸ்டாலினுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். விழாவில் கலந்துகொள்வதற்காக 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
அமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறையை வழங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
அந்த வகையில் தமிழக அமைச்சரவை விஸ்தரிக்கப்பட்டு புதிய அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இணைகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சேர்த்து தமிழக அமைச்சரவையில் மொத்தம் 34 பேர் அமைச்சர்களாக உள்ளனர். உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆவதால் அது 35 ஆக உயரும்.
இந்நிலையில் அவருக்கு தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டிடத்தில் அமைச்சர் அறையை தயார் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அங்குள்ள 2-வது தளத்தில் அமைச்சர்கள் பொன்முடி, சக்கரபாணி அறைகளுக்கு அருகே அறை தயார் செய்யப்பட்டு வருகிறது. அந்த இடத்தில் ஏற்கனவே சிறப்பு திட்ட செயலாக்க துறையைச் சேர்ந்த அலுவலர்கள் பணியாற்றி வந்தனர். அவர்களுக்கு 2-ம் தளத்தில் இருந்த டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயனின் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. டெல்லி பிரதிநிதிக்கு 10-வது நுழைவு வாயில் அருகே உள்ள அறை ஒதுக்கப்படுகிறது. தற்போது அந்த அறையை தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கப்படும் அறையை கடந்த 2 நாட்களாக
50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இணைந்து தயார் செய்து வருகின்றனர். இதற்காக தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டு உள்ளது. இரவு, பகலாக இந்த பணி தொய்வின்றி நடைபெற்று வருகிறது. அவரது அறைக்கு வெளியே தொங்கவிடப்படும் பெயர்ப்பலகையை தயார் செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கடந்த மார்ச் மாதம் முதல் முறையாக மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி அமைச்சர் ராஜகண்ணப்பன் வகித்து வந்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடமும், அவரிடம் இருந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ராஜகண்ணப்பனுக்கும் மாற்றப்பட்டது. இதன் பிறகு 2-வது முறையாக அமைச்சரவை நாளை மாற்றி அமைக்கப்படுகிறது.