சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது..,
இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் கடலில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கு ஹைட்ரோகார்பன் அகழ்வு மற்றும் உரிமம் கொள்கையின் கீழ் விருப்பமனுக்களை கோரி இருந்தது. ஒன்றிய எரிசக்தி இயக்குனரகம் (DGH ) சார்பாக எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கான திறந்தவெளி அனுமதி (DALP) அடிப்படையில் 9வது சுற்று ஏலம் சமீபத்தில் விடப்பட்டு உள்ளது. இதில் நாடு முழுவதும் 28 பகுதிகளில் 1.36,596 சதுர கி.மீ ஏலம் விடப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கன்னியாகுமரிக்கு அருகே ஆழ்கடலில் 3 பகுதிகளும் சென்னைக்கு அருகே ஒரு பகுதியும் இதில் இடம் பிடித்துள்ளது. இந்த 4 ஆழ்கடல் தொகுதிகளை கபளீகரம் செய்ய ஓ.என்.ஜி.சி மற்றும் வேதாந்தா நிறுவனம் முயற்சிக்கிறது.
குமரியில் ஏலம் விடப்பட்ட பகுதி முக்கடலும் சங்கமிக்கும் கடற்கரையில் இருந்து தென்மேற்காக 30 நாட்டிக்கல் மைல் தொலைவில் உள்ளது.10 ஆயிரம் சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இந்த படுகை “வாட்ஜ் பேங்க்” என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இதுபோன்ற படுகை வேறு எங்கும் இல்லை. இங்கு 200க்கும் மேற்பட்ட மீன்வகைகள், கடல்குதிரை, டால்பின் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட கடல்வாழ் உயிரினங்கள் வசிக்கின்றன. இங்குள்ள இயற்கை சூழலால் இப்பகுதி கடல்வாழ் உயிரினங்களின் சொர்க்க பூமியாக திகழ்கிறது.

தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த லட்சக்கணக்கான மீனவர்கள் இங்கு மீன்பிடிக்கின்றனர். இதனை நம்பி பலபேருக்கு வேலை கிடைக்கிறது. கோடிகணக்கான மக்களின் உணவு பெட்டகமாக இது திகழ்வது உண்மை. இந்நிலையில் இங்கு எண்ணை மற்றும் எரிவாயு அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டால் இங்குள்ள இயற்கை சூழலை முற்றிலுமாய் அழிப்பதோடு மீனவர்களின் வாழ்வாதாரமும் பறிபோயிடும். மக்களின் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டசத்து பாதுகாப்பு என்பது கேள்விகுறியாகும்.
ஏற்கனவே காலநிலை மாற்றத்தால் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் நாம் கார்பரேட் பசிக்கு இயற்கையினை காவு கொடுப்பது எந்த வகையில் நியாயமாகும்? ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் பெட்ரோலிய திட்டம் என்னும் முகமூடி போர்த்தி கொண்டு வளர்ச்சி என்னும் பெயரில் மக்கள் உயிருடன் விளையாடும் போக்கு நமக்கு நாமே புதைகுழி தோண்டுவது போன்றது.
எரிவாயு எடுக்க கதிர்வீச்சு தன்மை கொண்ட ரேடியம் உள்ளிட்ட கனிமங்களை பயன்படுத்துவதால் நீரியல் விரிசல் முறையால் 60% நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கைவிட்ட திட்டத்தை கொண்டு குமரியில் செயல்படுத்துவதால் மீன்கள் மட்டுமல்ல சுற்றுசூழலும் அடியோடு அழியும். எனவே மக்களுக்கும், இயற்கை சூழலுக்கும் எதிரான இத்திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்.