திருச்சி விமானநிலையத்தில் ஓடுபாதை விரிவாக்கப் பணிக்காக மத்திய அரசு ரூ.18.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளது.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ.1,112 கோடியில் புதிய விமான முனையத்தை கடந்த 2024ம் அண்டு பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து, திருச்சியில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், சார்ஜா உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. திருச்சியில் புதிய விமான நிலையம் திறந்து பயன்பாட்டுக்கு வந்த பிறகும், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பழைய விமான ஓடுபாதையில் தான் விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. இதனால் பெரிய ரக விமானங்கள் திருச்சிக்கு இயக்கப்பட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், விமான நிலைய ஓடுபாதையை விரிவாக்கம் செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில், திருச்சி விமான நிலையத்தில், தற்போதுள்ள 8,136 அடி ஓடுபாதையை 13,057 அடிக்கு விரிவாக்கம் செய்ய மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
இதுகுறித்து திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில், கலந்துகொண்டு கொடி ஏற்றி வைத்து பேசிய விமான நிலைய இயக்குநர் ஜி.கோபாலகிருஷ்ணன், “திருச்சியில் ரன்வேயை நீட்டிக்க கையகப்படுத்தப்பட்ட நிலத்தைப் பாதுகாக்கவும், விமான நிலைய விரிவாக்கத்தைத் தொடங்கவும் இந்திய விமான நிலைய ஆணையம் ரூ.18.6 கோடி ஒதுக்கி இருக்கிறது என்றார்.
மேலும், விரிவாக்கம் பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த பணிகள் முடிந்ததும், ஓடுபாதை நீட்டிப்பு திட்டம் முழு வீச்சில் தொடங்கும். இது திருச்சி விமான நிலையத்தின் அந்தஸ்தை மேலும் உயர்த்தும்” என்று தெரிவித்தார்.
திருச்சி விமானநிலைய ஓடுபாதை விரிவாக்கத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு
