• Fri. Mar 29th, 2024

செல்போன் கொண்டுவந்தால் பறிமுதல் செய்யப்படும் -மாணவர்களுக்கு எச்சரிக்கை

ByA.Tamilselvan

Jun 14, 2022

திருச்சியில் ட்டா மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பட்டா வழங்கினார்.
பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்போன் கொண்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும். மாணவர்களின் கவன சிதறலை போக்கும் வகையில் பள்ளிகளில் முதல் ஐந்து நாட்கள் புத்தாக்க பயிற்சி அளிக்கப்படும் அதன் பின்பு தான் வகுப்புகள் தொடங்கும்.
11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி தொடங்கிய உடன் தன்னார்வ அமைப்புகள், காவல் துறையை கொண்டு புத்தாக்க பயிற்சி வழங்கப்படும் என்றார். தனியார் பள்ளிகள் அங்கு படிக்கும் மாணவர்களை சீறுடை, புத்தகம் உள்ளிட்டவற்றை பள்ளிகளிலேயே வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்த கூடாது. 12 வயதுக்கு மேற்பட்ட 90 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது தொடர்ந்து அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. அரசு பள்ளியில் சேரும் மாணவர்களை தக்க வைக்கும் வகையில் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். இந்த ஆண்டில் 9,494 புதிய ஆசிரியர்களை பணியில் அமர்த்த உள்ளோம்.
பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டாலும் இல்லம் தேடி கல்வியின் தேவை இருக்கிறது. இல்லம் தேடி கல்வி திட்டத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளோம். இரண்டாண்டுகளுக்கு பின் இந்தாண்டு தான் வழக்கம் போல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் போது தான் இல்லம் தேடி கல்வி திட்டத்தை படிப்படியாக நாம் நிறுத்த முடியும் என்றார்.
மேலும் நீட் தேர்வுக்கு எதிரான சட்ட போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. நாம் கொடுத்த அழுத்தத்தினால் தான் ஆளுநர் நீட் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பினார். எந்த சட்டப்போராட்டமாக இருந்தாலும் முதலமைச்சர் அதில் வெற்றி பெறுவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. ஜி.எஸ்.டி நிலுவை தொகையை வழங்கும் படி நேரடியாக பிரதமரிடம் முதல் அமைச்சர் கோரிக்கை வைத்தார் அதன் காரணமாக ஜி.எஸ்.டி நிலுவை தொகை மாநிலத்திற்கு வழங்கப்பட்டது. முதலமைச்சர் கொடுக்கும் குரல் நியாயமான குரல் என ஒட்டுமொத்த இந்தியாவே ஒத்துக்கொள்கிறது. அது போல தான் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்கிற குரலும் நியாயமான குரல் அதில் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *