நாடு முழுவதும் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் இன்று (12ம் தேதி) வெளியானது. இதில் 87.33 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிபிஎஸ்இ மாணவர்களுக்கான 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. தேர்வு எழுதிய மாணவர்கள் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் நேற்று (மே 11) வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி வந்தன.
இதுகுறித்த செய்திகள் பரவலாக வெளியானதை அடுத்து சிபிஎஸ்இ சார்பில் முக்கிய தகவல் வெளியிடப்பட்டது. அந்த வகையில், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே 11ம் தேதி வெளியாகும் என்று கூறி வெளியான தகவலில் உண்மையில்லை என்று விளக்கம் அளித்திருந்தது. மேலும் இதுகுறித்து வெளியான அறிக்கையும் போலியானது என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தேர்வு முடிவுகள் இன்று (12ம் தேதி) வெளியாகின. நாடு முழுவதும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது. மாணவர்களிடம் போட்டியை தவிர்க்க முதல் மூன்று இடங்களை மட்டும் குறிப்பிடுவது தவிர்க்கப்பட்டுள்ளது. 0.1 சதவீதம் பேர் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 97.40 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மத்திய இடைநிலைக்கல்வி வாரியத்தின் 12ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15ம் தேதி முதல் மார்ச் 21ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினார்கள்.
இந்த முடிவுகளை மாணவர்கள் www.cbse.nic.in, www.cbseresults.nic.in, www.cbseresults.gov.in மற்றும் www.cbse.gov.in ஆகிய இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம். மேலும் தேர்வு முடிவு விவரங்கள் பள்ளி மாணவர்களின் கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியின் மூலமாகவும் முடிவுகள் அனுப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 8ம் தேதி வெளியானது. அதில் 94.3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்கள் தற்போது கல்லூரிகளில் சேர்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சிபிஎஸ்இ முடிவுளும் தற்போது வெளியாகியுள்ளது. இனி அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருவனந்தபுரம் மண்டலம் சிறந்த மதிப்பெண்களை பெற்றுள்ளது. அங்கு 99.91 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிரக்யராஜ் மண்டலம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. அங்கு 78.05 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்கள் தங்கள் முடிவை தெரிந்துகொள்ள பதிவெண், பள்ளி எண், அட்மிட் அட்டை ஆகியவற்றை பயன்படுத்தி உள்ளே செல்ல முடியும். டிஜி லாக்கர் மற்றும் உமாங் தளங்களிலும் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். 10ம் வகுப்பு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற தகவலை சிபிஎஸ்இ தற்போது வரை வெளியிடவில்லை.