• Fri. Apr 26th, 2024

சிவகாசியில், பொறுப்பில்லாமல் கட்டப்படும் கழிவுநீர் வாறுகால்…

ByKalamegam Viswanathan

May 12, 2023

சிவகாசியில், பொறுப்பில்லாமல் கட்டப்படும் கழிவுநீர் வாறுகால்…அதிகாரிகள் பார்வையிட்டு, நடவடிக்கை எடுக்க கோரிக்கை…..
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக சிவகாசி நகரின் பல பகுதிகளில் சாலைகள் பராமரிப்பு, கழிவுநீர் வாறுகால்கள் வசதிகள் இல்லாமல் கடுமையான சுகாதாரக்கேடு இருந்து வந்தது. தற்போது நகரின் பல இடங்களிலும் கழிவுநீர் வாறுகால்கள் கட்டும் பணி, வாறுகால்கள் இணைப்பு பகுதிகளில் சிறிய அளவிலான பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வளவு பணிகள் நடந்து வந்தாலும், இந்தப் பணிகள் சரியாகவும், ஒழுங்காகவும் நடைபெறுகின்றதா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க தவறுவதால், வாறுகால்கள் கட்டும் பணிகள் சரியாக நடைபெறவில்லை. மாநகராட்சி உழவர் சந்தைக்கு செல்லும் வழியில் உள்ள, சேர்மன் பி.கே.எஸ்.சண்முக நாடார் சாலையில் கழிவுநீர் வாறுகால்கள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. சாலை ஓரங்களில் உள்ள மின் கம்பங்கள் அகற்றப்படாமல், மின்கம்பங்கள் குறுக்கே உள்ள நிலையில் வாறுகால்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் கழிவுநீர் செல்வதற்கு தடை ஏற்பட்டு, கழிவுநீர் சாலைக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. கட்டுமானப் பணியின் போதே இது குறித்து கூறியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் வந்து பார்க்காத நிலையில், தொடர்ந்து கட்டுமானப் பணிகள் நடந்து முடியும் நிலையில் உள்ளது. செய்யும் பணியை சரியாக செய்ய வேண்டும் என்ற பொறுப்புணர்வு யாருக்கும் இருப்பதாக தெரியவில்லை என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். மேலும் இந்தப் பகுததியில் குழந்தைகள் நல மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகள் அதிகம் இருப்பதால், கழிவுநீர் வாறுகால்களை சரியாாகவும் முறையாகவும் கட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *