• Sun. Jan 25th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

மதுரை தொண்டு நிறுவனம் மீது சிபிஐ வழக்கு

வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதில் கோடிக்கணக்கில் முறைகேட்டில் ஈடுபட்டதாக மதுரையில் உள்ள தனியார் அறக்கட்டளை மற்றும் தொண்டு நிறுவனம் மீது 8 பிரிவுகளின் கீழ் சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.


மதுரையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் CPSC அறக்கட்டளையின் கீழ் ‘People’s ‘ என்ற தொண்டு நிறுவனமும் செயல்பட்டு வருகிறது. கடந்த 1985 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளை வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நன்கொடை மற்றும் பல்வேறு வகையில் நன்கொடையாகக் கிடைக்கப்பெறும் நிதி ஆதாரங்களைக் கொண்டு குழந்தைகள், முதியவர்கள், எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் என பல்வேறு தரப்பினருக்கு காப்பகங்கள் வைத்து நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறும் தொண்டு நிறுவனங்கள் அதற்குண்டான ஆவணங்களைக் காட்டி முறையாக உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால், CPSC அறக்கட்டளை முறையான அனுமதி பெறாமலும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டும் கோடிக் கணக்கில் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.


இது தொடர்பாக கடந்த 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ஆய்வு செய்த உள்துறை அமைச்சக அதிகாரிகள் நன்கொடை பெற்றதில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்திருப்பதையும், முறையான அனுமதி பெறாததையும் உறுதி செய்து சி.பி.ஐ விசாரிக்க பரிந்துரைத்தது.


அதனடிப்படையில் சி.பி.ஐ இவ்விவகாரத்தில் விசாரணை மேற்கொண்டதில் CPSC அறக்கட்டளை மற்றும் அதன் கீழ் இயங்கி வரும் ‘People’s ‘ தொண்டு நறுவனம் கடந்த 2005-2006, 2010-2011 மற்றும் 2012-2013 காலகட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து பலமுறை உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெறாமல் கோடிக் கணக்கில் பணம் நன்கொடை பெற்றுள்ளதை கண்டுபிடித்தனர்.


இந்நிலையில் CPSC அறக்கட்டளை மற்றும் ‘People’s ‘ தொண்டு நிறுவனம் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளிலும், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் 6 பிரிவுகளிலும் சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இவ்வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் தனியார் தொண்டு நிறுவனம் முறைகேடு செய்துள்ள பண மதிப்பு குறித்து விசாரணை முடிவுக்குப்பின் தெரிவிக்கப்படும் எனவும் சி.பி.ஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.