• Sat. Apr 20th, 2024

தஞ்சை பள்ளி மாணவியின் தந்தை உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளி விடுதியில் 12-ம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மாணவியை விடுதி அறைகளை சுத்தம் செய்ய வற்புறுத்தியதாக வார்டன் சகாயமேரியை (62) போலீஸார் கைது செய்தனர்.இந்நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது அந்த மாணவி, தன்னை கிறிஸ்தவ மதத்துக்கு மாறுமாறு கட்டாயப்படுத்தியதாக பேசிய வீடியோ சமூகவலை தளங்களில் வெளியானது.

இதையடுத்து பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழகம் முழுவதும் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். பிரேத பரிசோதனை முடிந்தும் மாணவியின் உடலை வாங்க மறுத்து மதமாற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவியின் பெற்றோரும், பாஜகவினரும் போராட்டம் நடத்தினர். பின்னர், மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி அவரது தந்தை முருகானந்தம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தஞ்சை மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்ட நிலையில், தஞ்சை பள்ளி மாணவியின் தந்தை உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.தனது மகள் தற்கொலை விவகாரத்தில் தனது தரப்பின் வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *