பங்குச்சந்தை மோசடி வழக்கில் பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தலைவராக இருந்த மாதவி புரி புச் மீது வழக்குப்பதிவு செய்ய மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பங்குச்சந்தை கண்காணிப்பு அமைப்பான செபியின் தலைவராக இருந்தவர் மாதவி புரி புச். இவர் தனது பதவியைப் பயன்படுத்தி ஊழல் செய்ததாக காங்கிரஸ் கட்சி பகிரங்க குற்றம்சாட்டியது. மேலும், அதானி முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்தவில்லை எனவும் ஹிண்டன்பர்க் தெரிவித்து இருந்தது. அதில், அதானி குழுமம் வெளிநாடுகளில் உருவாக்கிய நிறுவனங்களில், மாதபி பூரி புச் மற்றும் அவரது கணவர் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வைத்திருந்தனர் என்று குற்றம் சாட்டப்பட்டது. இதன் காரணமாகவே அதானியின் சந்தேகத்துக்குரிய நிறுவனங்கள் மீது செபி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்பட்டது. இந்த குற்றச்சாட்டை மாதவி மறுத்திருந்தார்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் பத்திரிகையாளர் ஒருவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதி சசிகாந்த் ஏக்நாத் ராவ் பங்கர், ” குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளது. அத்துடன் தவறு நடந்திருப்பது முதல்கட்ட ஆதாரங்களில் தெளிவாக தெரிகிறது. எனவே, மாதவி புரி புச் உள்பட 5 அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் தடுப்பு அமைப்பு (ஏசிபி) முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். விசாரணை அமைப்புகளும், செபியும் எந்த நடவடிக்கையையும் எடுக்காத காரணத்தால், இதில் நீதிமன்றம் தலையிட வேண்டிய சூழல் வந்துவிட்டது. அத்துடன் இந்த விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்கும். இது குறித்து 30 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டார். இதனிடையே, தனது தரப்பு வாதத்தை முன்வைக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை என கூறியுள்ள செபி, இந்த உத்தரவுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளது.