வயநாட்டில் கட்சி நிர்வாகி மற்றும் அவரது மகனைத் தற்கொலைக்குத் தூண்டியதாக காங்கிரஸ் எம்எல்ஏ, மாவட்ட தலைவர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம், வயநாடு மாவட்டம் மணிச்சரக்கல் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன்(78). வயநாடு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக இருந்து வந்தார். விஜயனுக்கு விஜேஷ், ஜிஜேஷ்(38) என்ற 2 மகன்கள் இருந்தனர்.. ஜிஜேஷ் மனநலம் பாதித்தவர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது மகன் ஜிஜேஷீடன் சேர்ந்து விஜயன் கடந்த மாதம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம், சுல்தான் பத்தேரி காங்கிரஸ் எம்எல்ஏ பாலகிருஷ்ணன் தொடர்புடையை கூட்டுறவு வங்கி வேலை ஊழல் காரணமான விஜயன் தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் குற்றம் சாட்டின. கூட்டுறவு வங்கிகளில் வேலை வாங்கித் தருவதாக விஜயன் பணம் வசூலித்து எம்எல்ஏ பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரிடம் கொடுத்ததாகவும் ஆனால் அவ்வாறு வேலை வழங்கப்படாததால் பணத்தைத் திருப்பி கொடுக்க முடியாமல் விஜயன் தற்கொலை செய்து கொண்டதாகவும் புகார் எழுந்தது.
இந்த நிலையில் விஜயனை தற்கொலைக்கு தூண்டியதாக காங்கிரஸ் எம்எல்ஏ ஐ.சி. பாலகிருஷ்ணன், வயநாடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.டி.அப்பச்சன் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்கொலைக்கு முன் விஜயன் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் கேரளா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.