• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

18 கி.மீ தடையை மீறி நடைபெற்ற பேரணி… மதுரையில் 5 ஆயிரம் விவசாயிகள், பெண்கள் மீது வழக்கு

ByP.Kavitha Kumar

Jan 8, 2025

அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி பேரணி சென்ற 5 ஆயிரம் விவசாயிகள் மற்றும் பெண்கள் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரியும், மேலூர் முல்லைப் பெரியாறு ஒரு போக பாசன விவசாயப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் மேலூர் பகுதிகளில் பொதுமக்கள், விவசாயிகள் கடந்த ஒரு மாதமாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக மேலூர் முல்லைப் பெரியாறு, ஒரு போக பாசன விவசாயிகள் சங்கம், பல்வேறு விவசாய சங்கங்கள் இணைந்து மதுரை தமுக்கத்தில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நேற்று நடத்தினர். இந்த பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி பேரணியில் ஈடுபட்டனர்.

கிட்டத்தட்ட 18 கி.மீ. தூரத்தை 7 மணி நேர பயணமாக கடந்து, விவசாயிகள், பெண்கள் என பல்லாயிரக்கணக்கானவர்கள், மதுரை தமுக்கம் மைதானத்துக்கு வந்து திரண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், தென் மண்டல ஐ.ஜி பிரேம் ஆனந்த் சின்ஹா. உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை ஏற்று மக்கள் கலைந்து சென்றனர்.

தடையை மீறி நடைபெற்ற இந்த பேரணிக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன், துணை ஆணையர்கள் ராஜேஸ்வரி, அனிதா, வனிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் ஆகியோர் தலைமையில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் , டங்ஸ்டன் சுரங்கம் எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்ட 5 ஆயிரம் விவசாயிகள் மற்றும் பெண்கள் மீது தல்லாகுளம் காவல்துறையினர் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.