சென்னையில் காவல் துறை தடையை மீறி போராட்டம் நடத்திய சௌமியா அன்புமணி உள்பட 297 பாமகவினர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், பாமக மகளிர் சங்கம் சார்பில் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பபட்டிருந்தது. ஆனால், போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
ஆனால், காவல் துறை தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்வதற்காக பாமகவினர் நேற்று காலை 10 மணியளவில் வள்ளுவர் கோட்டம் அருகே குவிந்தனர். ஆர்ப்பாட்டம் செய்ய வந்த சௌமியா அன்புமணி, பாமக வடக்கு மண்டல இணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, மாநில பொருளாளர் திலகபாமா உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நுங்கம்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணியில் உள்ள சமுதாயக்கூடங்களில் வைக்கப்பட்டிருந்தனர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.இந்த நிலையில் வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சௌமியா அன்புமணி உள்ளிட்ட 297 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.





