• Sun. Apr 28th, 2024

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது : தேர்தல் ஆணையம்

Byவிஷா

Mar 27, 2024

திமுக கூட்டணியில் உள்ள மதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால், அக்கட்சிக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்கீடு செய்ய முடியாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கோரி பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதிகள் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, வைகோ தரப்பில் தங்கள் கோரிக்கையை ஏற்று கட்சி நிர்வாகிகளின் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த தேர்தல் ஆணையம், பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யவில்லை. வேட்புமனு தாக்கலுக்கு இன்று கடைசி நாள் என்பதால், தங்கள் கோரிக்கையை பரிசீலிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டது.
இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும் பட்சத்தில் ஒரே சின்னம் ஒதுக்கப்படும். மதிமுகவின் கோரிக்கை மீது முடிவெடுக்கப்படும்.
கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில் மதிமுகவுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார் என்று தெரிவித்தார். இதையடுத்து, பம்பரம் சின்னம் பொது சின்ன பட்டியலில் உள்ளதா இல்லையா என்று பிற்பகல் 2.15 மணிக்கு விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வழக்கு பிற்பகல் விசாரணைக்கு வந்த போது, பம்பரம் சின்னம் பொது சின்னமாகவோ, ஒதுக்கீட்டு சின்னமாகவோ வகைப்படுத்தப்படவில்லை. மதிமுக அளித்த விண்ணப்பத்தின் மீது நாளை (இன்று) காலைக்குள் முடிவெடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கேட்டு அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தின் மீது நாளை (இன்று) காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை இன்று பிற்பகலுக்கு தள்ளிவைத்தனர்.

இந்நிலையில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என மதிமுக வழக்கறிஞர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் மறுத்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிடுவோம் என அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். மேலும் பம்பரம் சின்னம் இல்லை என்றால் மாற்று ஏற்பாடு வைத்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *