• Tue. Jun 30th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

எடப்பாடி கொடுத்த பதவியை ஏற்க முடியாது.. எஸ்.பி வேலுமணி மீண்டும் போர்க்கொடி – தவிக்கும் அ.தி.மு.க !!!!

BySeenu

Jun 30, 2026

கோவையில் இரு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எஸ்.பி வேலுமணி பேசிய வீடியோ தற்போது வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் சி விஜயபாஸ்கர், எம்.ஆர் விஜயபாஸ்கரை அடுத்து எஸ்.பி வேலுமணியும் ராஜினாமா செய்யப்போகிறாரா ? என்ற கேள்வி எழுந்து உள்ளது.

கோவையில் நடைபெற்ற தனது ஆதரவாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில், எஸ்.பி வேலுமணி ஆவேசமாக பேசிய வீடியோ வெளியாகி உள்ளது. எடப்பாடி பழனிசாமி வழங்கிய பதவியை ஏற்க மாட்டேன் என்று எஸ்.பி வேலுமணி பேசி உள்ளார். எஸ்.பி வேலுமணி கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் பதவியை ஏற்கப்போவது இல்லை. என்னை நம்பி வந்தவர்களை விட்டு விட்டு பதவியை ஏற்க நான் தயாராக இல்லை. என்னுடன் 9 மாவட்ட செயலாளர்கள் வந்து உள்ளனர். அவர்கள் யாருக்கும் பதவி கொடுக்கவில்லை. எனக்கு மட்டும் பதவி கொடுத்தால் ஏற்றுக்கொள்ள முடியுமா ? எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

என்னை நம்பி பின்னால் நிற்பவர்கள் எல்லாரும் கஷ்டப்பட்டவர்கள்.. வீரமணி, விஜயபாஸ்கர், சி.வி சண்முகம், தங்கமணி அந்த மாவட்டத்தினுடைய ஜாம்பவான்கள்.. செலவு பண்ணி கட்சியை வளர்த்து இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் பதவி கொடுக்கவில்லை. என்னை நம்பி வந்தவர்களுக்கு பதவியை கொடுங்கள்” என்று எஸ்.பி வேலுமணி ஆவேசமாக பேசும் வீடியோ வெளியாகி உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க 47 இடங்களில் மட்டுமே வென்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. அ.தி.மு.க தோல்வியால் அக்கட்சியில் மீண்டும் பிளவு ஏற்பட்டு உள்ளது. எஸ்.பி வேலுமணி தலைமையில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் 25 பேர் விஜய் அரசுக்கு ஆதரவு அளித்தனர். பின்னர் தகுதி நீக்க நடவடிக்கையை எதிர்கொண்டதால் மீண்டும் எடப்பாடியுடன் சமரசமாக சென்றனர். இருந்தாலும் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு கட்சி பதவியை வழங்காததால் அதிருப்தி நிலவியது.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக எஸ்.பி வேலுமணிக்கு துணை பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். தலைமை நிலைய செயலாளராக இருந்த எஸ்.பி வேலுமணிக்கு அந்த பொறுப்பை மாற்றி விட்டு துணை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. எஸ்.பி வேலுமணியின் பின்னால் கை கோர்த்தவர்களுக்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்படாததும் வேலுமணிக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் கடந்த சில நாட்களாக தனது ஆதரவாளர்களுடன் எஸ்.பி வேலுமணி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த சூழலில்தான், கோவையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தனது ஆதங்கத்தை எஸ்.பி வேலுமணி கொட்டி தீர்த்து உள்ளார். அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் 6 பேர் ஏற்கனவே ராஜினாமா செய்து உள்ளனர். இதில் 4 பேர் த.வெ.க வில் இணைந்து உள்ள நிலையில், சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர் விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் வரும் வியாழக்கிழமை த.வெ.க வில் தனது ஆதரவாளர்களுடன் இணைய இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்த சூழலில் எஸ்.பி வேலுமணியின் இந்த ஆவேச பேச்சும், அவரும் அ.தி.மு.க வில் இருந்து வெளியேற தயாராகி வருகிறாரா ? என்ற கேள்வியை அ.தி.மு.க வினரிடம் எழுப்பி உள்ளது.