புதுக்கோட்டை மாவட்டம் கடற்கரை பகுதியான கோட்டைப்பட்டினம் அருகே உள்ள செய்யானம் என்ற கிராமத்தைச் சேர்ந்த செல்லக்கண்ணு மகன் ராஜா. இவர் அப்பகுதியில் கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கமும் இருந்திருக்கிறது. அதனால் கொத்தனார் வேலை முடிந்து மாலை நேரத்தில் அப்பகுதியில் உள்ள மதுபான கடைக்கு சென்று மது அருந்திவிட்டு வருவதை வழக்கமாகவும் வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் ஐந்து நாட்களுக்கு முன்பு அங்குள்ள மதுபான கடைக்கு மது அருந்து சென்ற போது அங்குள்ள பாரில் மது அருந்தி கொண்டிருந்தபோது இவருடன் இருந்த வேறு சிலருக்கும் பார் நடத்தி வருபவர்களுக்கும் தகராறு நடந்து இருக்கிறது. 50 ரூபாய் பிரச்சனைக்காக தகராறு நடந்ததால் இவர் தடுத்து கேட்டிருக்கிறார். மேலும் அந்தத் தொகையையும் இவரே நான் தருவதாக சொல்லி இருக்கிறார். பார் நடத்தி வருபவர்களை தடுத்து கேட்டதால் கோபமடைந்து பார் நடத்தி வருபவர்கள் ராஜாவின் வயிற்றில் பாட்டிலால் குத்தி இருக்கிறார்கள்.

அதனால் அங்கேயே பலத்த காயமுற்று இருக்கிறார். அவருக்கு மட்டுமல்ல வேறு சிலருக்கும் அடிதடி நடந்து இருக்கிறது. பார் நடத்தி வரும் பழனி சுரேஷ் கருப்பையா விஜய் கார்த்தி இன்னும் சிலர் சேர்ந்து தான் இந்த தாக்குதலை நடத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரியப்படுத்தப்பட்டு இருக்கிறது. காயம் அடைந்த அனைவரும் மனமேல்குடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைக்கு சேர்ந்து இருக்கிறார்கள். இதில் அதிக காயமுற்ற ராஜாவை அங்குள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை செய்ய முடியாது என்று கூறிய நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்று சேர்த்திருக்கிறார்கள். தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு தற்போது வரை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மிகவும் வறுமையில் வாடும் ராஜாவின் குடும்பத்திற்கு உதவி செய்ய யாருமே இல்லாத நிலையில் பாரில் புகுந்து தகராறு செய்ததாக ராஜா மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது. இது குறித்து ராஜாவின் மனைவி நிஷாந்தி கூறுகையில் என் கணவருக்கு குடிப்பழக்கம் உள்ளது என்பது உண்மைதான் என்றாலும் யாருடனும் வம்புக்கு போக மாட்டார். பார் நடப்பவர்களே பாட்டிலால் குத்தி விட்டு இப்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் எனது கணவர் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்திருப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது. பாட்டிலால் குத்தியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள் என்று காவல்துறையில் கேட்டபோது முறையான பதில் சொல்ல மறுக்கிறார்கள். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை என்று கண்ணீருடன் கூறினார்.
இச்சம்பவம் குறித்து கோட்டைப்பட்டினம் காவல் ஆய்வாளர் மாலதியிடம் கேட்டபோது இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளோம். யார் புகார் கொடுத்தாலும் வாங்குவது எங்களது கடமை என்று முடித்துக் கொண்டார். இது குறித்து மேலும் விசாரித்த போது இந்த பார் அனுமதி இல்லாமல் நடைபெற்று வருகிறது என்பதும் இதே போல் நிறைய அரசு மதுபான கடைகளில் அனுமதியே இல்லாமல் செல்வாக்கு உள்ளவர்கள் மட்டும் குத்தகைக்கு எடுத்து நடத்துவதைப் போல் நடத்தி வருகிறார்கள் என்பதும் தெரிய வந்திருக்கிறது.
பாதிக்கப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதும் பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் மீது காவல்துறை கண்டுகொள்ளாமல் இருப்பதும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் ஆதங்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.











; ?>)
; ?>)
; ?>)