சேலத்தில் தொடர் மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் உயிரிழப்பு…..
சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துகொண்டு உள்ளதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 350 மில்லி மீட்டர் அளவிற்கு மழைநீரின் அளவானது பதிவாகியுள்ளது.
சேலம் அல்லிகுட்டை பகுதியை சேர்ந்தவர் ராமசாமி நெசவுத் தொழில் செய்து வருகிறார். இவருடன் தந்தை ஏழுமலை மற்றும் சகோதரி காளியம்மாள் ஆகியோர் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை தொடர் மழை காரணமாக வீட்டில் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ராமசாமியின் நான்கு வயது மகன் பாலசபரி அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலையே உயிரிழந்தார். இந்த சுவர் இடிந்த விழுந்த விபத்தில் ராமசாமி அவரது தந்தை ஏழுமலை, சகோதரி காளியம்மாள் மற்றும் காளியம்மாளின் குழந்தைகள் புவனா, மாரியப்பன் ஆகிய ஐந்து நபர் காயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரவு முழுவதும் மழை பெய்து வந்ததன் காரணமாக மண் சுவர் என்பதால் மழைநீரில் சுவர் முழுவதும் ஊறி, ஆறு பேர் மீதும் விழுந்தது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட ஆட்சியர் கார்மேகம் விபத்து நடைபெற்ற இடத்தில் ஆய்வு செய்தார். இது தொடர்பாக கோட்டாட்சியர் விஷ்ணுவர்தனி விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.