

சென்னை திருவல்லிக்கேணியில் குத்துச்சண்டை வீரர் நள்ளிரவில் மர்மக்கும்பலால் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி ராஜாஜி நகர் கிருஷ்ணாம்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மகன் தனுஷ்(24). குத்துச்சண்டை வீரரான இவர் தமிழ்நாடு சார்பில் பல்வேறு போட்டிகளில் கலந்து பதக்கம் வென்றுள்ளார். தமிழ்நாடு காவல் துறையில் சேர வேண்டும் என்று தனுஷ் தேர்வுக்குத் தயாராகி வந்தார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும், தனுஷீக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் அவர் மீது இரண்டு வழக்குகள் பதியப்பட்டன. இதனால் காவல்துறை வேலைக்கு தனுஷ் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில்வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த தனுஷை மர்மக்கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி கொன்றது. இதைத் தடுக்கச் சென்ற தனுஷின் நண்பர் அருணையும் மர்மக் கும்பல் வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஐஸ் ஹவுஸ் போலீசார் தனுசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காயமடைந்த அருணை சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். முன் விரோதம் காரணமாக தனுஷ் கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் நள்ளிரவில் குத்துச்சண்டை வீரர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

