சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், கீழடி அருங்காட்சியகத்தில் நேற்று முன்தினம் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மற்றும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் – சிந்துவெளி ஆய்வு மையம் இணைந்து நடத்திய ”கீழடியில் சிந்துவெளி நாள் விழாவில்” மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தலைமையில், நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ஆகியோர் சிந்துவெளி ஆய்வு மைய மதிப்புறு ஆலோசகர் ஆர். பாலகிருஷ்ணன் (ப.நி.) மற்றும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி ரவிக்குமார் ஆகியோர் முன்னிலையில் பங்கேற்று, நூல்கள் மற்றும் ஆய்விதழ்களை வெளியிட்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின் போது, அமைச்சர் தெரிவிக்கையில்,

சிந்து சமவெளி நாகரிகக் காலக்கட்டத்தில் தமிழர்கள் பண்பாடு கலாச்சாரத்துடன், வாழ்ந்ததற்கான அடையாளம் இந்த ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டு, உலக வரலாற்றில் தமிழர்கள் சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முன்பு பண்பாடு கலாச்சாரத்துடன் வாழ்ந்த பெருமை தமிழர்களுக்கு முழுமையாக இருந்ததாக போற்றப்பட்டு வருகின்றன.
இத்தகைய வரலாற்றுச் சிறப்புகள் உலகநாடுகள் அளவில் பேசப்படும் அளவிற்கு பண்டையக்காலத்தில் தமிழர்கள் வாழ்ந்த வரலாற்றுச் சிறப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. இதில், பண்டையகாலத்திலேயே வாழ்ந்த முன்னோர்கள் நவநாகரிக ஆபரணங்கள் பயன்படுத்தியது, எழுத்துச்சுவடிகள், தற்காப்புக்காக பயன்படுத்தும் ஆயுதங்கள், கட்டுமானப் பொருட்கள் என பலதரப்பட்ட பொருட்கள் இதுவரை நடந்த ஆராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இதன்மூலம், பண்டையக்கால மக்களின் நகரநாகரிக கலாச்சாரத்தை தெரிந்து கொள்வது மட்டுமன்றி, அதனைப் பாதுகாப்பதும் தங்கள் கடமை என உணர்ந்து, தமிழகத்தில் தொன்மை வாய்ந்த வரலாற்றுச் சிறப்புக்கள் கிடைக்கும் இடங்களைக் கண்டறிந்து, ஆராய்ச்சிப் பணிகளை செயல்படுத்தி முன்னோர்களின் கலாச்சாரத்தையும், பண்பையும் எதிர்கால இளம் தலைமுறையினரும் தெரிந்து கொள்ளும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இதன்மூலம் கலாச்சாரங்களையும், தமிழர்களையும் எப்பொழுதும் பாதுகாக்கும் தலைவராகத் திகழக்கூடியவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆவார்கள்.
மேலும், சரியாக 101 ஆண்டுகளுக்கு முன்பு, செப்டம்பர் 20, 1924 ஆம் ஆண்டு, இந்திய துணைக்கண்டத்தின் தொன்மை வரலாற்றை உலகிற்கு முதன்முதலில் பறைசாற்றிய சர் ஜான் மார்ஷல் அவர்கள், சிந்துவெளி நாகரிகம் குறித்த தனது மகத்தான அறிவிப்பையும் வெளியிட்டார்கள். அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளின் 101-வது ஆண்டை, சிந்துவெளி நாகரிகத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவாக கொண்டாடிடும் வண்ணம், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மற்றும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் சிந்துவெளி ஆய்வு மையமும் இணைந்து, இந்நாளினை கொண்டாடிட திட்டமிடப்பட்டு, அதற்கு பெருமை சேர்த்திடும் வகையில் வரலாற்று சிறப்பு மிக்க சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள கீழடியில் சிந்துவெளி நாள் விழா கொண்டாடுவது சிறப்பிற்குரிய ஒன்றாகும்.
நமது நாட்டின் தொன்மை மற்றும் கலாசாரத்தை அறிந்து கொள்வதற்கு பேருதவியாக இருந்து வரும் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையானது கடந்த 1961 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, தமிழ்நாட்டில் உள்ள தொன்மையான சின்னங்களைப் பாதுகாத்தல் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை முறையாக ஆய்வு செய்து அகழாய்வு நடத்துதல் போன்ற பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.
மேலும், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் சார்பில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் அகழாய்வுகள் மேற்கொண்டுள்ளது. அதில், கற்காலம், புதிய கற்காலம், இரும்பு காலம், சங்க காலம் முதல் வரலாற்று இடைப்பட்ட காலம் வரையிலான தொல்லியல் தளங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தற்போது, கீழடி, மருங்கூர், சென்னானூர், திருமலாபுரம், கீழ்நமண்டி, கொங்கல்நகரம், பொற்பனைக்கோட்டை மற்றும் வெம்பக்கோட்டை ஆகிய எட்டு இடங்களில் அகழாய்வுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வுத் தளங்களில் வெவ்வேறு காலகட்டங்களைச் சார்ந்த பல்வேறு தொல்பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சிந்துவெளி நாகரிகத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவினையொட்டி நடைபெறும் ”கீழடியில் சிந்துவெளி நாள் விழா” வில் தொல் தடம் ஆய்விதழ்களாக தமிழ்நாட்டுத் தொல்லியல் தளங்களின் அண்மைக்கால அறிவியல் காலக்கணக்கீடுகள் போன்ற ஆய்விதழ் மற்றும் நூல்களும் இந்நாளில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நூல் வெளியீட்டுகளில், ஜனவரி மாதம் நடைபெற்ற சிந்துவெளி நாகரிகக் கண்டுபிடிப்பின் நூற்றாண்டு: கருத்தரங்கு ஆய்விதழுடன் அன்மை கால அகழாய்வில் கண்டறியப்பட்ட தற்போதைய கண்டுபிடிப்புகளும், அறிவியல் காலக்கணக்கீடுகளும் முக்கியத்துவம் பெறுகின்ற வகையில் அமைந்துள்ளது. மேலும், பட்டினப்பாலை, மதுரைக் காஞ்சி போன்ற சங்க இலக்கியங்கள் தமிழரின் பண்பாட்டின் ஆழத்தையும், நாகரிகத்தின் உச்சத்தையும் எடுத்துரைக்கின்றன.
மேலும், வடஇந்தியாவின் கங்கைச் சமவெளியில் நகரமயமாதல் தொடங்கிய அதே காலகட்டத்தில், தமிழகத்திலும் நகரமயமாதல் தொடங்கியிருக்கிறது என்பதை உறுதி செய்திடும் வகையில், கடந்த 2018ஆம் ஆண்டு கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வின் போது சேகரிக்கப்பட்ட ஆறு கரிம மாதிரிகள், அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள பீட்டா பகுப்பாய்வு ஆய்வகத்திற்கு அனுப்பட்டதைத் தொடர்ந்து, அந்த ஆய்வறிக்கையின்படி, வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம் சுமார் 2,600 ஆண்டுகள் பழமையானது என உணர்த்துகிறது.
கீழடி ஆராய்ச்சி என்பது இந்த மண்ணிற்கு கிடைத்த பெரிய பாக்கியம் ஆகும். தற்பொழுது 10-ஆம் கட்ட அகழாய்வு ஆராய்ச்சிப் பணிகளும் தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சரால் கடந்த 23.01.2025 அன்று, கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைப்பதற்கென ரூ.17.80 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதனைத்தொடர்ந்து, திறந்தவெளி அருங்காட்சியக பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில், கீழடி அருங்காட்சியகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தினை நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், இயக்குநர் (இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை, டெல்லி) அமர்நாத் ராமகிருஷ்ணன் , மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.செல்வசுரபி , இணை இயக்குநர் (தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை) இரா.சிவானந்தம், கல்வி மற்றும் ஆய்வு ஆலோசகர் (தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை) கா.ராஜன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் தே.ஜெஃபி கிரேசியா, இயக்குநர் (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்) சுந்தர் கணேசன், அருங்காட்சியக இணை இயக்குநர் ரமேஷ், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மானாமதுரை நகர்மன்றத்தலைவர் மாரியப்பன் கென்னடி மற்றும் தொல்லியல் துறையைச் சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.