• Sun. Sep 27th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

பிணவறைகளில் காத்திருக்கும் உடல்கள்: உடற்கூறாய்வு நடைமுறையில் தாமதம் ஏன்?

ByKalamegam Viswanathan

Sep 27, 2026

தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான உடற்கூறாய்வுகள் நடைபெற்று வரும் நிலையில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் மட்டும் ஆண்டுக்கு 4,000-க்கும் மேற்பட்ட உடற்கூறாய்வுகள் நடைபெறுகின்றன. இந்நிலையில், காவல்துறை ஆவணங்கள், ஆன்லைன் நடைமுறை உள்ளிட்ட காரணங்களால் தாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுகுறித்த சிறப்பு தொகுப்பு.

மரணம் என்பது ஒரு குடும்பத்திற்கு மிகப்பெரிய இழப்பு. குறிப்பாக விபத்து, கொலை, தற்கொலை உள்ளிட்ட இயற்கைக்கு மாறான மரணங்களில், உடலை உடனடியாக உறவினர்களிடம் ஒப்படைக்க முடியாத நிலை ஏற்படுகிறது. காவல்துறை விசாரணை, உடற்கூறாய்வு, தடயவியல் பரிசோதனைகள் உள்ளிட்ட சட்ட நடைமுறைகள் முடிந்த பின்னரே உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த நடைமுறைகளில் ஏற்படும் தாமதம் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கூடுதல் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக உறவினர்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.

ஏன் உடற்கூறாய்வு?

ஒவ்வொரு மரணத்திற்கும் உடற்கூறாய்வு செய்யப்படுவதில்லை. சந்தேகத்திற்குரிய மரணம், விபத்து, கொலை, தற்கொலை, விஷம் அருந்தியதாக சந்தேகம், நீரில் மூழ்கி உயிரிழப்பு, தீக்காயம், மின்சாரம் தாக்குதல், அடையாளம் தெரியாத உடல், காவல் அல்லது நீதிமன்றக் காவலில் மரணம் உள்ளிட்ட சட்டரீதியான விசாரணை தேவைப்படும் நிகழ்வுகளில் மருத்துவ-சட்ட உடற்கூறாய்வு மேற்கொள்ளப்படுகிறது.

மரணம் எதனால் ஏற்பட்டது, உடலில் ஏற்பட்ட காயங்களின் தன்மை என்ன, அந்த காயங்கள் மரணத்துடன் தொடர்புடையதா, விஷம் அல்லது வேறு காரணிகள் உள்ளனவா போன்ற கேள்விகளுக்கு மருத்துவ மற்றும் தடயவியல் ஆதாரங்களை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
உடற்கூறாய்வில் வெளிப்புற காயங்கள் மட்டுமின்றி உட்புற உறுப்புகளும் பரிசோதிக்கப்படுகின்றன. தேவையான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நச்சியல், DNA, histopathology உள்ளிட்ட பரிசோதனைகளுக்கும் அனுப்பப்படலாம். எனவே, உடற்கூறாய்வு முடிந்தவுடன் அந்த வழக்கின் அனைத்து மருத்துவ விசாரணைகளும் முடிந்துவிட்டன என்று பொருளல்ல.

தமிழகத்தில் 300 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு

இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட முதல் medico-legal autopsy, 1693 ஆகஸ்ட் 28 அன்று அன்றைய சென்னையில் நடைபெற்றதாக மருத்துவ வரலாற்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. Dr. Edward Bulkley இந்த உடற்கூறாய்வை மேற்கொண்டதாக பதிவுகள் உள்ளன. பின்னர் 1835-ல் Madras Medical College தொடங்கப்பட்டதுடன் Medical Jurisprudence எனப்படும் மருத்துவ சட்டவியல் கல்வியும் நிறுவன ரீதியாக வளரத் தொடங்கியது. 1909 முதல் 1915 வரையிலான காலத்தில் சென்னை நகரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் மட்டும் 1,019 உடற்கூறாய்வுகள் நடைபெற்றதாக வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக்கின்றன.
இன்றைய நடைமுறை, அந்த நீண்டகால medico-legal அமைப்பின் வளர்ச்சியடைந்த வடிவமாக உள்ளது.

மதுரை ராஜாஜி மருத்துவமனையின் பணிச்சுமை

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தடயவியல் மருத்துவத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத் தகவலின்படி, அரசு ராஜாஜி மருத்துவமனை தொடர்பான பணிகளில் ஆண்டுக்கு 4,000-க்கும் மேற்பட்ட உடற்கூறாய்வுகள் நடைபெறுகின்றன. இது ஆண்டின் 365 நாட்களைக் கொண்டு கணக்கிட்டால், நாளொன்றுக்கு சராசரியாக குறைந்தது 11 உடற்கூறாய்வுகள் என்ற அளவைக் காட்டுகிறது. அங்கு 28 உடல் குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் 5 autopsy tables உள்ளதாகவும் மருத்துவக் கல்லூரி தெரிவிக்கிறது.
மதுரையைச் சுற்றியுள்ள பல மாவட்டங்களில் இருந்து சட்டரீதியான உடற்கூறாய்வுக்காக உடல்கள் மதுரைக்கு அனுப்பப்படுவதாக சமூக ஆர்வலர் நேதாஜி ஹரிகிருஷ்ணன் தெரிவிக்கிறார்.

“காவல்துறை ஆவணங்களால் தாமதம்”

உறவினரின் உடலை பெறுவதற்காக காத்திருந்த மதுரை மாவட்டம் ராஜாக்கூரைச் சேர்ந்த பச்சையம்மாளிடம் பேச்சு கொடுத்த போது , “விபத்தில் எங்கள் ஊரைச் சேர்ந்த உறவினர் உயிரிழந்துள்ளார். காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. அவர்களது அறிக்கைக்காக உடற்கூறாய்வு காத்திருக்கிறது. நடைமுறைகளை விரைவுபடுத்தினால் குடும்பத்தினர் இறுதிச்சடங்குகளை மேற்கொள்ள வசதியாக இருக்கும்” என்றார்.
மதுரை பைக்காராவைச் சேர்ந்த சமயவேல் கூறுகையில், “அண்ணன், தம்பி இடையிலான தகராறு கொலையில் முடிந்துள்ளது. காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதால் உடல் இங்கு கொண்டு வரப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் உறவினர்கள் காத்திருக்கிறோம். காவல்துறை அறிக்கைக்குப் பிறகே உடற்கூறாய்வு செய்து உடலை ஒப்படைப்பதாகத் தெரிவித்துள்ளனர்” என்றார்.

பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவற்ற உடல்களுக்கு தனது சொந்த செலவில் இறுதிச்சடங்குகள் செய்துள்ள சமூக ஆர்வலர் நேதாஜி ஹரிகிருஷ்ணன், தற்போதைய ஆன்லைன் நடைமுறை பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாகக் கூறுகிறார்.
“பிரேதப் பரிசோதனைக்கான விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றி, அவை சரிபார்க்கப்பட்ட பின்னரே மருத்துவ சட்ட மருத்துவரிடம் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக மதுரையைச் சுற்றியுள்ள தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வரும் வழக்குகளில் ஆவணங்களுடன் காவல்துறை மதுரைக்கு வருவதற்குள் பிற்பகல் ஆகிவிடுகிறது. இதனால் உறவினர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது” என்றார். மேலும், தற்போது உள்ள விண்ணப்பம் பெறும் நேரத்தை காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை என்று இருப்பதை 5 மணி வரை என நீட்டிக்க வேண்டும் என்றும், பணியாளர் பற்றாக்குறையைத் தீர்க்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

புதிய டிஜிட்டல் நடைமுறை

இதனிடையே, தமிழக காவல்துறை 2026 ஆகஸ்ட் 1 முதல் medico-legal cases மற்றும் post-mortem requisitions-க்கு CCTNS 2.0-ல் உள்ள MedLEaPR செயலியை கட்டாயமாகப் பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் இந்த முறை ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் காவல்துறை மற்றும் மருத்துவமனைகளுக்கு இடையே ஆவணங்களை மின்னணு முறையில் பரிமாறுவதும், காகித நடைமுறையைக் குறைப்பதும் ஆகும்.

“7 முதல் 8 மணி நேரம் ஆகிறது”

ராஜாஜி மருத்துவமனை பிணவறை தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பாண்டி கூறுகையில், “விபத்து நடந்த பிறகு காவல்துறை விசாரணை செய்து ஆவணங்களைத் தயாரித்து பிணவறைக்கு வருவதற்கே குறைந்தபட்சம் 7 முதல் 8 மணி நேரம் ஆகிறது. ஆன்லைனில் ஆவணங்களைப் பதிவேற்றி ஒப்புதல் பெறுவதிலும் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் இறுதிச்சடங்குகள் தாமதமாகின்றன. உடற்கூறாய்வு நேரத்தை மேலும் ஒரு மணி நேரம் நீட்டிக்க வேண்டும்” என்றார்.

மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்

இதற்கு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகம் அளித்த விளக்கத்தில், தமிழகத்திலேயே அதிக எண்ணிக்கையில் உடற்கூறாய்வுகள் நடைபெறும் மருத்துவமனைகளில் ராஜாஜி மருத்துவமனையும் ஒன்று என்றும், தேவையான மருத்துவர்கள் மற்றும் பிணவறை பணியாளர்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மருத்துவமனை நிர்வாகத்தின் கூற்றுப்படி, பிணவறை மருத்துவக் குழுவினர் காலை 10 மணிக்கே பணிக்கு வந்து விடுகின்றனர். ஆனால் சில வழக்குகளில் காவல்துறையிடமிருந்து தேவையான ஆவணங்கள் வந்து சேருவதில் தாமதம் ஏற்படுகிறது. குறிப்பாக CCTNS ஆன்லைன் பதிவால் ஏற்படும் தாமதங்கள் குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்து நடைமுறையை முறைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முந்தைய நாள் நிகழ்ந்த மரணங்களுக்கான ஆவணங்கள் தாமதமாக வருவது அதிக சிக்கலை ஏற்படுத்துவதாகவும், முக்கியமான கொலை வழக்குகளில் புலனாய்வு அதிகாரியின் நேரடி இருப்பு அவசியமாக இருப்பதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.மேலும், காலை முதல் மாலை வரை உடற்கூறாய்வு மேற்கொள்வதற்காக தனிக் குழுவை அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

நிலுவை வழக்குகளை கண்காணிக்க அரசு நடவடிக்கை

தமிழக சுகாதாரத்துறை 2026-ல் post-mortem வசதியுள்ள மருத்துவமனைகளிடமிருந்து தினசரி அறிக்கைகளைப் பெறும் நடைமுறையைத் தொடங்கியுள்ளது. அதில் அன்று பெறப்பட்ட உடல்கள், செய்யப்பட்ட உடற்கூறாய்வுகள், 24 மற்றும் 48 மணி நேரத்துக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகள், பிணவறை கொள்ளளவு, toxicology, DNA, histopathology தேவைப்படும் வழக்குகள் போன்ற விவரங்கள் கேட்கப்படுகின்றன. 10-க்கும் மேற்பட்ட உடற்கூறாய்வுகள் நிலுவையில் இருந்தாலோ அல்லது 48 மணி நேரத்துக்கும் மேலாக தாமதம் ஏற்பட்டாலோ red-flag notification வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால், உடற்கூறாய்வை விரைவுபடுத்துவது மட்டுமின்றி, காவல்துறை ஆவணங்கள், டிஜிட்டல் பதிவுகள், மருத்துவப் பரிசோதனை, தடயவியல் மாதிரிகள் மற்றும் உடல் ஒப்படைப்பு என முழு நடைமுறையையும் ஒருங்கிணைப்பதே தீர்வாகும்.

மரணத்தின் காரணத்தை சட்டரீதியாக உறுதி செய்வது அவசியமான அதே நேரத்தில், அந்த நடைமுறை காரணமாக ஏற்கெனவே துயரத்தில் இருக்கும் குடும்பங்கள் தேவையற்ற காத்திருப்புக்கு ஆளாகாத வகையில் நிர்வாக அமைப்புகளும் செயல்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது என்பதுதான் கள எதார்த்தம்.