ஓட்டுக்கு பணம் கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்கும் கலாச்சாரத்தை உடைத்து இருக்கிறோம் என்று பெருமையாக வீர வசனம் பேசும் முதலமைச்சர் விஜய், தவெக அரசின் தனி பெரும்பான்மையை உறுதி செய்திட, வேறு கட்சிகளில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் புதிய அரசியல் கலாச்சாரத்தை அரங்கேற்றம் செய்து வருகிறார் .

ராஜினாமா செய்த சட்டமன்ற உறுப்பினர்களை மீண்டும் தவெக கட்சியில் போட்டியிட வைப்பது என்பது தமிழக வாக்காளர்களுக்கு பரிசோதனை முறையாக அதிரடி ஆட்டத்தை தொடங்கி வைத்து, ஜனநாயகத்தை விலை பேசி ஜனநாயகத்தை கேலிகூத்தாக்கி புதிய கலாச்சாரத்தை மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் துவங்கி உள்ளார் .
தாராபுரம், மதுராந்தகம் வாக்காளர்கள் ஒருபோதும் இதை அனுமதிக்க கூடாது. தாராபுரம்,மதுராந்தகம் வாக்காளர்கள் ஆளுங்கட்சி என்று அனுமதித்து விட்டால், தமிழக அரசியலில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற கலாச்சாரம் காணாமல் போய்விடும் .தமிழக அரசியலில் ஆளும் ஒரே கட்சிக்கு ஆட்சி முறை என்றால் அது சர்வாதிகாரத்திற்கு அழைத்துக் கொண்டு போய் விடும். இதனால் விஜய் ஒரு சர்வாதியாக மாறக்கூடும். அந்த நிலையை நாம் அடைந்தால் தமிழகத்தில் எதிர்காலம், வளர்ச்சி கேள்விக்குறியாகிவிடும் .

இந்த நான்கு மாதங்களில் சட்ட ஒழுங்கு சீர்கேடு, இந்தியாவிலேயே இல்லாத வகையில் கொலைகள் தமிழகத்தில் அரங்கேற்றம், அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு இவைகளால் மக்கள் படும் துயரம் இதனால் தவெக அரசு தட்டு தடுமாறி வருகிறது.
எப்படியாவது தவெகவின் ஆயுள் காலத்தை உறுதி செய்திட பெரும்பான்மை இல்லை என்றாலும், கூட்டணி கட்சிகளை ஏமாற்றி விலை பேசுவதும், மறுபுறம் பிற கட்சியில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் குதிரை பேரம் நடத்துவது. ஆனால் நாங்கள் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் தரமாட்டோம் ,வாக்காளர்களை விலைக்கு வாங்க மாட்டோம் என பெருமையாக பேசுகின்ற விஜய் தற்போது பிற கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை குதிரை பேரம் நடத்தி, விலைக்கு வாங்குவது என்ன கலாச்சாரம் ? இதை எப்படி எடுத்துக் கொள்வது நமக்கு புரியவில்லை.
இதற்கெல்லாம் நியாயமான தீர்ப்பு வழங்கிட தாராபுரம், மதுராந்தகம் தொகுதி வாக்காளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் இன்றைக்கு கடிவாளம் இல்லாத அரசு என்ற நிலை ஏற்பட்டால் என்ன ஆவது ?
பேரறிஞர் அண்ணா கூறுவார் ஆளுங்கட்சி பானையில் கொதிக்கும் சோறு போன்றது, இதில் எதிர்க்கட்சி என்பது அந்த சோற்றை பதம்பார்க்கும் அகப்பையாக இருக்க வேண்டும். ஆளுங்கட்சியை பக்குவப்படுத்த எச்சரிக்கை மணி அடிப்பதற்கு வலிமையான எதிர்க்கட்சிகள் இருக்க வேண்டும் அதுதான் ஜனநாயகத்தின் வலிமையாகும்.

இன்றைக்கு ஜனநாயகத்தின் வலிமையாக அதிமுக உள்ளது கடந்த சட்டமன்ற தேர்தலில் தாராபுரத்தில் மட்டும் இரட்டை இலைக்கு 81,000 வாக்காளர்கள் எடப்பாடியார் முதலமைச்சராக வர வேண்டும் என வாக்களித்தார்கள். அதேபோல மதுராந்தகம், தாராபுரத்தில் எடப்பாடியாரின் கரத்தை வலுப்படுத்த இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் . புரட்சித்தலைவர், அம்மா,எடப்பாடியார் ஆகியோர் செய்த சாதனை திட்டங்களுக்கு மகுடம் சூட்டும் வகையில் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என கூறினார்.




