பெரியாறு அணை நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தக்கோரி, சனிக்கிழமை (பிப்ரவரி 8) தமிழக எல்லையில் முற்றுகை போராட்டம் என தமிழக விவசாயிகள் அறிவித்தனர்.
முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது என்ற உச்ச நீதிமன்றத்தின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அணையை வெளிநாட்டு ஏஜென்சிகளைக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 136 அடியாகக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து தமிழக கேரள எல்லையான குமுளியில் நேற்று கேரள ஜனநாயக உரிமைப் பாதுகாப்பு குழுவினர்
உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இந்நிலையில் தமிழக எல்லை குமுளியில் போராட்டம் நடத்த அனுமதி கொடுத்த கேரள காவல்துறையை கண்டித்தும், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த கோரியும், பெரியாறு அணைக்கு எதிராக தொடர்ந்து, அவதூறு பரப்பி வரும் கேரள அரசியல்வாதிகள், இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், வரும் சனிக்கிழமை (பிப்ரவரி 8) தமிழக எல்லை குமுளியில் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளதாக, பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பென்னிகுக் பாலசிங்கம் கூறுகையில், பெரியார் அணை குறித்த உச்சநீதிமன்றத்தின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக எல்லை குமுளியில் நேற்று கேரள ஜனநாயக உரிமைப் பாதுகாப்பு குழுவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி உள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை கொழுந்து விட்டு எரிந்த போது, அணை தொடர்பான தமிழகப் போராட்டக்காரர்கள் லோயர் கேம்ப்போடு நின்று விட வேண்டும் எனவும், கேரள போராட்டக்காரர்கள் வண்டிப்பெரியாரோடு நின்று விட வேண்டும் எனவும் ஒரு முடிவு எட்டப்பட்டது. அதையும் மீறி கடந்த ஆண்டு சேவ் கேரளா பிரிகேட் அமைப்பின் தலைவரான வழக்கறிஞர் ரசல் ஜோய் குமுளி பேருந்து நிலையத்தில் வந்து பொதுக்கூட்டம் நடத்தினார். அப்போதே அதை நாங்கள் தட்டிக் கேட்டோம். இப்போது மறுபடியும் அதே நிலை வந்திருக்கிறது. எந்தக் காரணத்தைக் கொண்டும் குமுளி பேருந்து நிலையத்தை போராட்டக்காரர்கள் பயன்படுத்துவதற்கு இடுக்கி மாவட்ட காவல்துறை அனுமதிக்க கூடாது என்று தெரிவித்தும், குமுளியில் தனியார் அமைப்பினர் போராட்டம் நடத்தியது இரு மாநில உறவை சீர்குலைப்பதற்கு வழிவகுத்துள்ளது. எனவே வரும் சனிக்கிழமை காலை 11.00 மணி அளவில் உச்ச நீதிமன்றத்தின் மாண்பை காக்க கோரியும், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த கோரியும், பெரியாறு அணைக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் கேரள அரசியல்வாதிகள், இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், குமுளி தமிழக எல்லையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறும். இதில் பல்வேறு விவசாய சங்கங்களும் தன்னார்வலர் அமைப்பினர்களும் கலந்து கொள்கின்றனர் என்றார்.
