உசிலம்பட்டி அருகே 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஊராட்சி நிர்வாகம் 100 நாள் வேலை திட்டத்தில் முறையாக பணி வழங்குவதில்லை என கூறப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு முறையாக பணி வழங்க கோரியும், அரசு நிர்ணயம் செய்துள்ள 319 ரூபாய் வழங்க கோரியும், வேலை வழங்க ஒவ்வொரு மாற்றுத் திறனாளிகளிடமும் ரூ 50 லஞ்சமாக கேட்பதாக குற்றம்சாட்டி இன்று சேடபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் மாநில செயல் தலைவர் நம்புராஜன் தலைமையிலான மாற்றுத் திறனாளிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து விரைந்து வந்த சேடபட்டி காவல் நிலைய போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் பணி வழங்க நடவடிக்கை எடுப்பதோடு, 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்குவதில் உள்ள குளறுபடிகளை ஆய்வு செய்து முறையாக பணி வழங்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.