உத்தர பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தை டிஜிட்டல் முறையில் நடத்த பாஜக தயாராகிறது.
இது, அதிகரித்து வரும் கொரோனாவின் மூன்றாவது அலையின் தாக்கம் எனக் கருதப்படுகிறது.
ஐந்து மாநில தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடுமா எனும் கேள்வி தொடர்கிறது. கொரோனாவின் மூன்றாவது அலையின் பரவல் காரணத்தால் தீவிரக் கட்டுப்பாடு களுடன் அறிவிப்பு வெளியாகவும் வாய்ப்புகள் உள்ளன.
இதனால், முக்கிய தேசியக் கட்சியாகி விட்ட பாஜக டிஜிட்டல் முறையில் தேர்தல் பிரச்சாரம் செய்யத் தயாராகிறது. 3டி எனப்படும் முப்பரிமாண வடிவில் இணையதளம் வழியாக தங்கள் தலைவர்களின் பிரச்சாரம் தொடர வழி வகுத்துள்ளது.
இது குறித்து உபி மாநில பாஜகவின் அமைப்பாளர்களில் ஒருவரான காமேஷ்வர் மிஸ்ராகூறும்போது, ‘நவீன டிஜிட்டல் முறையில் இரண்டு வேறு இடங்களில் உள்ள நம் தலைவர்களை ஒரே மேடையில் பேசுவது போல்காட்ட முடியும்.
இந்த உரையை ஒரே சமயத்தில் சுமார் ஒன்றரை லட்சம் பேரின் கைப்பேசிகள் வழியாக ஒளிபரப்ப முடியும். இதற்கான மாதிரிக் கூட்டங்களும் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.’ எனத் தெரிவித்தார்.
இந்த வகையிலானப் பிரச்சாரங்களை மாநிலத்தின் தலைநகரில் இருந்தபடி அனைத்து மாவட்டங்களிலும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக பாஜகவின் ஐ.டி தொழில்நுட்பப் பிரிவின் சார்பில் தங்கள் கட்சியினரில் சுமார் மூன்று லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்தஇணையதளக் கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்காக சிறப்பு செயலிகளும்பாஜகவால் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த டிஜிட்டல் முறை பிரச்சாரங் களை ஜனவரி 10-ம் தேதிக்கும் பிறகு துவக்க பாஜக தலைமை உத்தரவிடும் என எதிர்பார்க்கப் படுகிறது.
அரசியல் கட்சிகளில் இன்டர்நெட் இணைப்பை பயன்படுத்தி சமூகவலைதளங்களில் டிஜிட்டல் முறை பிரச்சாரத்தை ஆம் ஆத்மி கட்சி முதலில் தொடங்கியது. இதன் பலனாக அக்கட்சிக்கு டெல்லியில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பும் கிடைத்தது. எனினும், இதேமுறையை ஆம் ஆத்மியைவிடத் தீவிரமாக பாஜக 2014 மக்களவை தேர்தல் முதல் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.