தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்தவர் முகமது அனீஸ். இவர் மதுரையில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். நிதி நிறுவனத்தில் பிட்காயின் பரிவர்த்தனையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கோடிக்கணக்கில் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிட்காயின் மோசடி புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் வெளி வந்த நிலையில் கடந்த மாதம் 19ம் தேதி மதுரையிலிருந்து அவரால் ஏமாற்றப்பட்ட சில மர்ம நபர்கள் அவரை கடத்தி தென்காசி அருகே உள்ள ஓரிடத்தில் வைத்து மர்ம நபர்களால் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டு பலத்த படுகாயமடைந்த முகமது அனீஸை தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு தப்பியோடிய சில நிமிடங்களில் அவர் உயிரிழந்தார்.

சம்பவம் அறிந்த தென்காசி காவல்துறையினர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில், 8 பேர் கொண்ட கும்பல் கொலை செய்தது தெரிந்து. பக்ருதீன், மகேந்திரன், அசாருதீன், அலாவுதீன், முகம்மது ரபீக் என ஐந்துபேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மீதமுள்ள குற்றவாளியை தேடி வந்த நிலையில் கொலையில் தொடர்புடைய ஏர்வாடியை சேர்ந்த முகம்மது சித்திக் (எ) சாலை குமார் (54) என்பவரை தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர் முத்துக் கிருஷ்ணன், தலைமை காவலர் கோபி, காவலர்கள் அருள்ராஜ், அலெக்சாண்டர் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் மதுரை ஒத்தக் கடையில் வைத்து கைது செய்து தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர் செய்து பாளை சிறையில் அடைத்தனர்.