கோவையில் டைட்டல் பார்க்கில் நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்ற நபர் ஒருவர், நீலாம்பூர் பகுதியில் உள்ள ஒரு கடையின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த வாகனத்தில் இருந்து ஹெல்மெட்டையும் திருடிச் சென்ற விசித்திரமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

போலீஸார் போன் செய்து கேட்ட பிறகே, தன் பைக் திருடப்பட்ட விஷயமே உரிமையாளருக்குத் தெரியவந்து உள்ள சுவாரஸ்யமான பின்னணி இதோ:
”நீங்க ஹெல்மெட் திருடிட்டீங்க” – அதிர்ச்சி அடைந்த ஐ.டி ஊழியர்:
கோவை கொடிசியா அருகே உள்ள டைட்டல் பார்க்கில் இயங்கி வரும் முன்னணி ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவரை, இன்று மதியம் 12:30 மணி அளவில் நீலாம்பூர் காவல் நிலையப் போலீஸார் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உள்ளனர்.

”நீலாம்பூர் பகுதியில் உள்ள கடை ஒன்றின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த ஹெல்மெட்டை உங்கள் பைக்கில் வந்து திருடிச் சென்று உள்ளீர்கள். உடனடியாக அந்த ஹெல்மெட்டைக் கொண்டு வந்து திருப்பிக் கொடுத்து விடுங்கள்” எனப் போலீஸார் கூறி உள்ளனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த ஐ.டி ஊழியர், “நான் டைட்டல் பார்க்கிற்குள் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டு இருக்கிறேன். நான் எப்படி நீலாம்பூர் சென்று ஹெல்மெட் திருட முடியும் ?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு போலீஸார், “முதலில் உங்கள் பைக் பார்க்கிங்கில் பத்திரமாக இருக்கிறதா என்று கீழே சென்று பாருங்கள்” எனக் கூறி உள்ளனர்.
உடனடியாகக் கீழே சென்று பார்த்த போது தான், தனது இருசக்கர வாகனம் பார்க்கிங்கில் இருந்து காணாமல் போயிருந்தது அந்த ஊழியருக்குத் தெரியவந்தது.
டைட்டல் பார்க்கில் இருந்து அந்த இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர், நீலாம்பூர் பகுதி வழியாகச் சென்று உள்ளார். தனக்குத் தலைக்கவசம் (Helmet) இல்லாததால், போலீஸாரிடம் மாட்டிக் கொள்வோம் என அஞ்சிய அந்தத் திருடன், நீலாம்பூர் பகுதியில் உள்ள கடைகளின் அருகே பைக்கை நிறுத்தி உள்ளான். பின்னர், தான் இயற்கை உபாதை கழிக்கச் செல்வது போலக் நாடகமாடிவிட்டு, அருகே நிறுத்தப்பட்டு இருந்த மற்றொரு வாகனத்தில் தொங்க விடப்பட்டு இருந்த ஹெல்மெட்டை நைஸாகத் தூக்கிக் கொண்டு தனது திருட்டு பைக்கில் தப்பியோடி உள்ளான்.
CCTV காட்சிகளில் சிக்கிய திருடன் – இரு காவல் நிலையங்களில் புகார்:
தன் ஹெல்மெட் திருடுபோனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த நபர், கடையில் இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்த போது, திருடன் வந்த வாகனத்தின் எண் துல்லியமாகப் பதிவாகி இருந்தது. அந்தப் பதிவு எண்ணைக் கொண்டு பாதிக்கப்பட்டவர் நீலாம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் அந்த வண்டி எண்ணை வைத்து உரிமையாளருக்குத் தொடர்பு கொண்ட போது தான், இது பைக் திருட்டுச் சம்பவம் என்பதே வெளிச்சத்திற்கு வந்தது.

தனது பைக் காணாமல் போனது குறித்து வாகன உரிமையாளர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். அதேபோல ஹெல்மெட்டைப் பறிகொடுத்த நபர் நீலாம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
ஒரே திருடன் பைக்கையும் தூக்கிக் கொண்டு, ஹெல்மெட்டையும் ஆட்டையைப் போட்டு போலிஸுக்குத் தண்ணீர் காட்டிய இச்சம்பவம் கோவை மக்கள் இடையே பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிசிடிவி காட்சி பதிவுகளை வைத்து இரு காவல் நிலையப் போலீஸாரும் அந்த விசித்திரத் திருடனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.



