• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நாட்டிலேயே அதிக ஏழைகள் வாழும் மாநிலம் பீகார்!

Byமதி

Nov 27, 2021

நிதி ஆயோக்கின் நடத்திய ஆய்வின்படி, நாட்டில் ஏழைகள் அதிகம் உள்ள மாநிலங்கள் வரிசையில், பீகார், ஜார்கண்ட், உத்தரப்பிரதேச மாநிலங்கள் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

சுகாதாரம், கல்வி, வாழ்க்கைத்தரம் ஆகியவற்றின் அடிப்படையில் 12 முக்கிய அம்சங்களைக்கொண்டு நாடு முழுவதும், நிதி ஆயோக் ஆய்வு நடத்தியது. இதன்படி, பீகாரில் 51.91 சதவிகிதம் பேர் ஏழைகள் என்று தெரியவந்துள்ளது. ஜார்கண்ட்டில் 42.16 சதவிகிதம் பேரும், உத்தரப்பிரதேசத்தில் 37.79 சதவிகிதம் பேரும் ஏழைகள் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 36.65 சதவிகிதம் ஏழைகளுடன் மத்தியப்பிரதேசம் 4 ஆம் இடத்திலும், 32.67 சதவிகித ஏழைகளுடன் மேகாலயா ஐந்தாம் இடத்திலும் இருக்கிறது.

இதேபோல் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் அதிகம் உள்ள மாநிலங்களிலும் பீகார் முதலிடத்தில் உள்ளது. ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் அடுத்த இடங்களில் உள்ளன.

தாய்மார்களின் ஆரோக்கியம், பள்ளிப்படிப்பு, பள்ளி வருகை, சமையல் எரிபொருள் மற்றும் மின்சார பயன்பாடு ஆகியவற்றிலும் பீகார் மிக மோசமான இடத்தில் உள்ளது.

0.71 சதவிகித ஏழைகளுடன் கேரளா, 3.76 சதவிகித ஏழைகளுடன் கோவா, 3.82 சதவிகித ஏழைகளுடன் சிக்கிம், 4.89 சதவிகித ஏழைகளுடன் தமிழகம், 5.59 சதவிகித ஏழைகளுடன் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் பட்டியலில் கடைசி ஐந்து இடங்களை பிடித்துள்ளன.

வறுமையில் உள்ளவர்களை மேம்படுத்த திட்டங்கள் வகுக்க இந்த ஆய்வு உதவும் என்று நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.