இந்திய சினிமாவில் புதிய மைல்கல்லை உருவாக்கிய பாகுபலி திரைப்படத்துக்குப் பிறகு, ஆர்ஆர்ஆர் திரைப்படம் மூலம் புதிய பிரம்மாண்டத்தை உருவாக்கியிருக்கிறார் ராஜமௌலி. மார்ச் இறுதி வாரத்தில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் சுமார் ஆயிரத்து 100 கோடிக்கும் மேல் வசூலித்து பாக்ஸ் ஆஃபீஸ் கிங்காக மாறியுள்ளது. திரையிட்ட இடங்களில் எல்லாம் வசூல் மழை பெற்ற ஆர்ஆர்ஆர் இந்தியா மட்டும்மல்லாது உலகளவிலும் ஹிட் அடித்துள்ளது.
கொரோனா வைரஸ் இல்லாமல் இருந்திருந்திருந்தால் கடந்த ஆண்டே வெளியாகியிருக்கும் இப்படம், ஒரு வழியாக இப்போது ரிலீஸாகி பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் அடித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் ஹிட்டான ஆர்ஆர்ஆர், பாலிவுட்டிலும் கொடி நாட்டியுள்ளது. ஏற்கனவே பாகுபலி 2 பாலிவுட்டில் அமோக வரவேற்பை பெற்று கலெக்ஷனிலும் இதுவரை இல்லாத அளவுக்கு வசூலை வாரிக் குவித்தது. தற்போது அந்த சாதனையை ஆர்ஆர்ஆர் முறியடித்துள்ளது. இந்தப் படத்தை பார்த்த பாகுபலி நாயகன், தனக்கு ஏற்பட்ட உணர்வுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
உலக தரத்தில் ஆர்ஆர்ஆர் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள பிரபாஸ், ஒரு சில இடங்களில் கண்ணீரை அடக்க முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார். படத்தின் காட்சிகள் நுணுக்கமாகவும் பிரம்மாண்டமாகவும் அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள அவர், இதுவரை ஆயிரம் கோடிக்கும் மேல் வசூலித்திருப்பது பெரும் சாதனை எனக் கூறியுள்ளார். இயக்குநர் ராஜமௌலியை வெகுவாக பாராட்டிய பிரபாஸ், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 10 சீன்கள் தன்னை அழ வைத்ததாகவும், 50 சீன்கள் மெய்சிலிர்க்க வைத்ததாகவும் பிரபாஸ் கூறியுள்ளார்.