• Sat. Apr 20th, 2024

மூன்று தலைமுறை இணைந்து நடிக்கும் ஓமைகாட்

மூன்று தலைமுறையினர் ஒரு படத்தில் நடிப்பது அபூர்வமானது அதிலும் தாத்தா, அப்பாவுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு குழந்தை நட்சத்திரமான ஆர்ணவ் விஜய்க்கு கிடைத்திருக்கிறது அருண்விஜய் மகன் பிரதான பாத்திரத்தில் நடிக்கும் குழந்தைகளுக்கான படம் ஓமை டாக் இப்படத்தில் நடித்தது சம்பந்தமாக நடிகர் அருண்விஜய்

பேசுகையில், ” என்னுடைய மகன் ஆர்ணவ் விஜய்க்கு இது போன்றதொரு அறிமுகத்தை உருவாக்கிக் கொடுத்த சூர்யா-ஜோதிகா ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் மற்றும் 2d பட நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அர்ணவ் முதல் படத்திலேயே என்னுடன் நடிப்பதை விட அவருடைய தாத்தா உடன் இணைந்து நடிப்பதை பாக்கியமாக கருதியதால், இந்த வாய்ப்பை தவற விட வேண்டாம் என எண்ணி, அவரை நட்சத்திரமாக நடிக்க ஒப்புக்கொண்டேன். இதனை கடவுளின் ஆசீர்வாதமாகவே நினைக்கிறேன். இயக்குநர் சரோவ் சண்முகத்திற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற குழந்தைகளுக்காகவே எடுக்கப்பட்ட ஒரு அற்புதமான கதை. நிறைய உணர்வுகள் அவர்களைச் சுற்றி பின்னப்பட்டிருக்கிறது. என்னுடைய கதாபாத்திரம் மற்றும் என்னுடைய அப்பாவின் கதாபாத்திரம் ஆர்ணவ் விஜய் கதாபாத்திரம் ஆகிய அனைத்தையும் யதார்த்தமாக இயக்குநர் எழுதியிருந்தார். கதையைக் கேட்டபோது ஆர்ணவ் விஜய்யின் 70 முதல் 80 வீத சேட்டைகள் கதையில் இடம் பெற்றிருக்கிறது. அதனால் அவன் எளிதாக நடித்து விடுவான் என்று நம்பினேன். அவன் செய்யும் சுட்டித்தனங்கள் அனைத்தும் ரசிகர்களை ரசிக்க வைக்கும் . ஆர்ணவிற்கு நாய்க்குட்டி என்றால் உயிர். நாய்க்குட்டி மட்டுமல்ல அனைத்து விலங்குகளிடமும் அன்பு செலுத்துவான். இதன் காரணமாகவே இந்த கதாபாத்திரத்தை அவன் எளிதாக நடிப்பான் என நினைத்தேன். ஆர்ணவ் விஜய்யுடன் நடித்த சுட்டி குழந்தைகள் அனைவருடன் படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய ஒவ்வொரு நாளும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. பல விசயங்கள் அவர்களிடமிருந்து நான் கற்றுக் கொண்டதொரு நிலையும் இருந்தது.

குழந்தைகளையும், நாய்க்குட்டிகளை வைத்து படம் எடுக்க வேண்டும் என்றால் மிகுந்த பொறுமை வேண்டும். இதற்காக கடுமையாக உழைத்த ஒளிப்பதிவாளர் கோபிநாத், இயக்குநர் சரோவ் மற்றும் படக்குழுவினருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பு தருணத்தில் எதையும் திட்டமிட்டு படமாக்க முடியாது. குழந்தைகள் மற்றும் நாய்க்குட்டிகள் அவர்களுக்கான மனநிலையுடன் நடிக்கும் போது அதனை படமாக்கி கொள்ள வேண்டும். அதனால் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளர் கோபிநாத் தான் தூணாக இருந்து செயல்பட்டார் என சொல்லலாம். படப்பிடிப்பு குழுவினரின் ஒட்டுமொத்த உழைப்பும் இதில் இருக்கிறது. இந்த திரைப்படம் அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற மோட்டிவேஷனல் திரைப்படமாக இருக்கும். டிஸ்னி படைப்பு போல் ‘ஓ மை டாக்’ உருவாகி இருக்கிறது. ஏப்ரல் 21ஆம் தேதி அன்று அதுவும் உலகம் முழுவதும் ‘ஓ மை டாக்’ வெளியாகிறது. கோடை விடுமுறை என்பதால் இந்தப் படத்திற்கு பெரும் ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். நன்றி” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *