தமிழக சட்டப்பேரவையில் இந்துசமய அறநிலையத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடந்தது. அப்போது பேசிய பாஜக எம்எல்ஏ சரஸ்வதி, கோவில்களில் பணியாற்றுபவர்கள் அசைவம் சாப்பிடுகிறார்கள் எனவும் கோவில் நகைகளை உருக்குவதில் எவ்வளவு பணம் கிடைக்கிறது எனவும் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கோவில்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு அசைவ உணவுகள் பரிமாறப்படுவது இல்லை என்று கூறினார்.
அவ்வாறு அசைவம் சாப்பிடும் பழக்கம் இருந்தால் அதற்கு தடை விதிப்பதற்கு தமிழ்நாடு அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார். இதையடுத்து அறங்காவலர்கள் இருக்கும் கோவில்களில் தங்கங்களை உருக்கலாம் என்று நீதிமன்றமே தெரிவித்து இருப்பதாகவும், அதனடிப்படையில் 3 மண்டலங்களாக பிரித்து நீதிபதிகள் நியமிக்கப்பட்டு அவர்கள் முன்னிலையில் நகைகளை உருக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதனிடையில் முதற்கட்டமாக திருச்சங்குடியிலுள்ள கோவில்நகைகள் 27.6 கிலோ அளவிற்கு மத்திய அரசாங்கத்திற்கு சொந்தமான மும்பையிலுள்ள தங்க உருக்காலைக்கு அனுப்பபட்டதாக கூறினார். அதன் வாயிலாக பெறப்பட்ட பணம் எஸ்பிஐ வங்கியில் வரவு வைக்கப்பட்டது. ஆகவே இதன் வாயிலாக கோடிக்கணக்கில் வருமானம் கிடைப்பதாகவும், இப்பணத்தில் கோவில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.