• Fri. Mar 29th, 2024

‘அமேசான், ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தை தடை செய்யுங்கள்’ – ஆர்எஸ்எஸ் பொருளாதார பிரிவு

இந்தியாவில் கிறித்தவ மதத்தை ஊக்குவிப்பதாக அமேசான் நிறுவனத்தின் மீது ஆர்எஸ்எஸ் அமைப்பின் பத்திரிகையான பாஞ்சஜன்யா சில மாதங்களுக்கு முன்பு குற்றஞ்சாட்டி இருந்த நிலையில், அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களுக்கு இந்தியாவில் செயல்படுவதற்கு வழங்கப்பட்ட அனைத்து அனுமதிகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று ஆர்எஸ்எஸ்ஸின் பொருளாதார பிரிவு அமைப்பான சுதேசி ஜாக்ரன் மஞ்ச் வலியுறுத்தியுள்ளது.


டிசம்பர் 26ஆம் தேதியன்று நிறைவடைந்த அவ்வமைப்பின் இரண்டு நாள் கூட்டத்தின்போது நிறைவேற்றப்பட்ட ‘அமேசான், ஃப்ளிப்கார்ட் வால்மார்ட் நிறுவனங்கள் பாரதத்தில் செயல்படுவதற்கான அனுமதியைத் திரும்பப் பெறுக’ என்ற தலைப்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், அந்நிறுவனங்களின் நடவடிக்கைகள் அனைத்தும் சட்டவிரோதமானது என்று சுதேசி ஜாக்ரன் மஞ்ச் குற்றஞ்சாட்டியுள்ளது.


அந்நிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும். என்று கோரியுள்ள சுதேசி ஜாக்ரன் மஞ்ச், “அமேசான் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கிறது. இந்த நிறுவனங்களில் இருந்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ சட்டவிரோதமாக பயனடையும் உயரதிகாரிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களை விடுப்பில் அனுப்ப வேண்டும். அதன் வழியாக, இவ்விவகாரம் தொடர்பாக நியாயமான விசாரணையை மேற்கொள்ள எளிதாக இருக்கும். அவர்களின் குற்ற நடவடிக்கைகளுக்காக தண்டிக்கப்பட வேண்டும்” என்று கோரியுள்ளது.


இந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஆர்எஸ்எஸ் அமைப்பின் பாஞ்சன்யா பத்திரிகை அமேசான் நிறுவனம் தொடர்பாக சிறப்பு கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், கிழக்கிந்திய கம்பெனியுடன் அமேசான் நிறுவனத்தை தொடர்புப்படுத்தியதோடு, அமேசான் நிறுவனம் ஊழல் செய்வதாக குற்றஞ்சாட்டியிருந்தது.


மேலும், அந்நிறுவனம் ‘பிரைம் வீடியோக்கள்’ வழியாக இந்து மதத்தை விமர்சித்து, இந்தியாவை கிறித்துவமயமாக்குகிறது என்றும் இரண்டு கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நிதியுதவி செய்து வருகிறது என்றும் பாஞ்சன்யா பத்திரிகையின் சிறப்பு கட்டுரை குறிப்பிட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *